சென்னை: கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட 124 கி.மீ. தூரம் கொண்ட சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை (NH 205) விரிவாக்கப்பணி முடிக்கப்படாத நிலையில், இந்த வருட இறுதியில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு அடுத்த வருடம் தொடக்கத்தில் இந்த சாலை வாகன ஓட்டிகளின் உபயோகத்திற்கு கொண்டு வரப்படும் என நெடுஞ்சாலை துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனைத்து பணிகளையும் முடித்து விட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் மாநில (தமிழ்நாடு) நெடுஞ்சாலை வெறும் 19 கி.மீ. தூரம் கொண்ட சென்னை பாடியிலிருந்து திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் வரை சாலை விரிவாக்கப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திட்டமானது 2011 ஆம் ஆண்டு சென்னை பாடியில் இருந்து - ரேணிகுண்டா வரை 124 கி.மீ. துாரத்திற்கு ஆறு வழிச் சாலையாக மாற்றும் பணி ரூ.571 கோடி ரூபாய் மதிப்பில் வேலைகள் தொடங்கப்பட்டன.
இருப்பினும், சாலை விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னை ஏற்பட்டதால் இந்த திட்டம் சில வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், திருவள்ளூர் - புத்துர் வரை இருவழிச் சாலையாக மட்டும் மாற்றப்பட்டது. மேலும், திருப்பதியில் இருந்து 40 கிமீ தூரத்திற்கு மட்டும் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. இதுகுறித்து நகர பொறியாளர்கள் (Urban Engineers) கூறுகையில், வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சென்னையிலிருந்து பிற நகரங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்ல பெரிய பட்ஜெட் மதிப்பீட்டில் திடங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை (NH 205) விரிவாக்கப் பணிக்களுக்கான வரவேற்புகள்:இருப்பினும் இந்த திட்டங்களை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நகர பொறியாளர் மற்றும் முன்னாள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பி.கே.சுப்பிரமணியன் கூறுகையில், "சாலை திட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவைதான். ஏனெனில், பொருளாதார வளர்ச்சிக்கு சாலைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. எனினும் சுற்றுச்சூழல், விவசாய நிலங்கள், நீர் வள ஆதாரங்கள் உள்ளிட்டவைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்" எனக் கூறினார்.
இதனிடையே, இந்த திட்டத்தினால் கால தாமதம் ஏற்படுவதால் ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் திருவள்ளூர் நகருக்குள் உள்ளே செல்வதால் நகரில் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த சாலை திட்டங்களை விரைவுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பலரின் கோரிக்கைகள் வலுபெற்று வருகின்றது.