சென்னை:கர்நாடகாவில் இருந்து சென்னை தியாகராயநகர் வழியாக யானை தந்தங்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இதனை அடுத்து தியாகராய நகர் வழியாக சென்ற அனைத்து கார்கள், ஆட்டோக்களை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவின் தனிப்படையினர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து உள்ளனர். அப்போது, சந்தேகக்கிற்கிடமாக வாகனத்தில் வந்த ஏழு நபர்களை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பிடித்து சோதனை நடத்தினர்.
அப்போது யானை தந்தங்களை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் தந்தங்களைப் கைப்பற்றிய போலீசார் அந்த நபர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது அவர்களிடம் யானை தந்தம் எடுத்து வருவதற்கான முறையான ஆவணங்கள் இல்லாதது தெரிய வந்தது. இதனை அடுத்து வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 4.03 கிலோ எடை கொண்ட தந்தங்களை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட அந்த யானைத் தந்தங்களின் சர்வதேச மதிப்பு ரூ.7 கோடியே 19 இலட்சம் ஆகும்.
இதையும் படிங்க:சென்னையில் உள்ளாடைக்குள் வைத்து 2 கிலோ தங்கம் கடத்தியவர்.. போலீசாரிடம் சிக்கியது எப்படி?
அதோடு கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அடுத்து சட்டவிரோதமாக யானை தந்தங்களை கடத்திச் சென்ற 7 பேரையும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், யார் இவர்கள்?, இவர்கள் இந்த யானை தந்தத்தை எங்கிருந்து கடத்தி வந்து, எங்கே விற்க எடுத்து செல்கின்றனர்?, இந்தக் கடத்தல் கும்பலில் இருப்பது யார் யார் என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் யானை தந்தத்தைக் கடத்தி நெட்வொர்க் அமைத்து விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்களையும், கடத்தலில் ஈடுபட்ட 7 நபர்களையும், சென்னை பெசன்ட் நகரில் உள்ள, மத்திய வனத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளிடம், மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் ஒப்படைத்து உள்ளனர்.
இது தொடர்பாக மத்திய வனக்குற்றப் பிரிவு அதிகாரிகள், வன உயிரின பாதுகாப்பு தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். வனத்துறை அதிகாரிகள் 7 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் 18 லட்சத்திற்கு விலைப்பேசி இடைத்தரகர் போல் நடித்து அந்த நபர்களை வரவழைத்து சுற்றி வளைத்து பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இடுப்பில் துணியைக் கட்டி கடத்தி வந்த தங்க கட்டி! மும்பையில் ரூ.6 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!