12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் சரிந்துவருவது தேர்வுத் துறையின் புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது.
தமிழ் வழியில் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்துவருகிறது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் சரிந்துவருவதுடன், மாணவர்கள் இடைநிற்றல் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனால், மாணவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தாலும், பொதுத் தேர்வு நடைபெறும்போது அதன் உண்மைத் தன்மை வெளிச்சத்திற்கு வந்துவிடுகிறது.
அதேபோல் இந்த ஆண்டும் அரசுத் தேர்வுத்துறை வெளியிட்ட புள்ளிவிவரத்தின் மூலம் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் சரிந்துவருவது தெரியவந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்கள் சேர்த்து 2017ஆம் ஆண்டு நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை, 8 லட்சத்து 93 ஆயிரத்து 262 பேர் பள்ளிகள் மூலமாக எழுதினர்.
ஆனால், அந்த எண்ணிக்கை 2018ஆம் ஆண்டு 8 லட்சத்து 60 ஆயிரத்து 434ஆக குறைந்தது. மேலும் 2019ஆம் ஆண்டு நடந்த தேர்வில் 8 லட்சத்து 42 ஆயிரத்து 512ஆக மேலும் குறைந்தது.
தொடர்ந்து இந்த ஆண்டு 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 என்ற எண்ணிக்கையில் சரிந்திருக்கிறது. அதிகபட்ச எண்ணிக்கையான 2017ஆம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 76 ஆயிரத்து 903 மாணவர்கள் குறைவாக எழுதுகின்றனர்.
இதேபோன்று தமிழ்வழியில் எழுதக்கூடிய மாணவர்கள் எண்ணிக்கை ஒட்டுமொத்த அளவில் வழக்கமாக 60 முதல் 65 விழுக்காடு இருந்துவந்தது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலனவர்கள், தமிழ் வழியில் கல்வி கற்றனர். ஆனால், சமீபகாலமாக ஆங்கில வழியில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். அதனால் இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரை 50 விழுக்காடு என்ற அளவிற்கு குறைந்துள்ளது.
மொத்தமுள்ள 8. 16 லட்சம் மாணவர்களில் 4. 65 லட்சம் மாணவர்கள் மட்டுமே தமிழ் வழியில் தேர்வு எழுதுகின்றனர். இதன் மூலம் ஆங்கிலம் உள்ளிட்ட இதர மொழிகளில் பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் எண்ணிக்கை அதிக அளவிலும், தமிழ் வழியில் எழுதக்கூடிய மாணவர்கள் எண்ணிக்கை குறைந்த அளவிலும் உள்ளது தெரிய வந்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருவது, கல்வியாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:'நாளைய உலகை கட்டமைக்கும் மாணவர்களே...!' - தெறிக்கவிடும் கனிமொழி