சென்னை: வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து விலகி வடகிழக்கு பருவமழை இன்று (அக்.25) முதல் தொடங்கியது.
தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடகாவில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது.
அநேக இடங்களில் மழை
அடுத்த இரண்டு நாள்களுக்கு தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். கனமழை பொறுத்தவரை நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர், திருப்பூர், கரூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.