சென்னை: வங்கக்கடலில் உருவான புயல் சின்னமானது, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும், குறிப்பாக தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் கனமழையானது பெய்து வருகிறது.
இதன் காரணமாகப் புழல் ஏரிக்கு வரும் நீர்வரத்தின் அளவு அதிகரித்து வருவதால் ஏரியில் இருந்து உபரி நீா் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது. இதனால் மாதவரம் மணலி பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீா் ஆதாரங்களில் ஒன்றாகப் புழல் ஏரியானது இருந்து வருகிறது.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாகப் புழல் ஏரிக்கு நீா் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால், புழல் ஏரி 2,890 மில்லியன் கன அடியாக உயர்ந்து உள்ளது. மேலும், ஏரிக்கு நீா் வரத்து வினாடிக்கு 570 கன அடியாக உள்ளது. இதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிக்கு வரும் உபரி நீரை பாதுகாப்பு கருதி உபரிநீர் திறப்பு 2,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.