தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'புதிய கல்விக் கொள்கை சமூக நீதிக்கும் ஒருமைப்பாட்டிற்கும் மிக ஆபத்தானது'

சென்னை: மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ள புதிய கல்விக் கொள்கை - 2019, சமூக நீதிக்கும், இந்திய ஒருமைப்பாட்டிற்கும் மிக ஆபத்தானது என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முனைவர் முரளி

By

Published : Jun 20, 2019, 2:20 PM IST

அனைவருக்கும் உயர்தர கல்வியை வழங்குவதன் மூலம் நமது தேசத்தை ஒருங்கிணைந்த, துடிப்பான, அறிவு மிக்க சமுதாயமாக மாற்ற முடியும். இதற்கு நேரடியாகப் பங்களிக்கும் விதமாக இந்தியாவை மையமாகக் கொண்ட கல்வி முறை என்று மத்திய அரசு தேசிய புதிய கல்விக் கொள்கை -2019 என்ற வரைவை குறிக்கோளாக முன் வைத்துள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு சாதகமற்ற அம்சங்களும், கல்விச் சூழலைப் பின்னுக்குத் தள்ளும் வரையறைகளும் இடம் பெற்றுள்ளன என கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இதனை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்துவதுடன், இந்த வரைவு குறித்த விரிவான விவாதம் தேவை என்ற கருத்தையும் முன் வைத்துள்ளனர்.

புதிய கல்விக் கொள்கை குறித்து கல்வியாளர்கள் கருத்து

இது குறித்து தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் முரளி கூறுகையில், 'தற்போது இந்தியாவிலுள்ள பல்கலைக்கழக மானியக்குழுதான் உயர்கல்வியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. ஆனால் இப்புதிய கல்விக் கொள்கை மூலமாக இக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, யூஜிசி முழுவதுமாகப் புறக்கணிக்கப்படும். இதன் மூலம், எந்தக் கல்லூரியும் எந்தவிதமான படிப்புகளையும் தொடங்கலாம். அதேபோன்று கட்டணங்களையும் கல்லூரிகளே நிர்ணயித்துக் கொள்ளலாம்.

உயர்கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தொடர்பாக எந்தவித தலையீடு செய்யமாட்டோம். ஏற்கனவே குறிப்பிட்டுள்ளவற்றை வேண்டுமானால் அப்படியே வைத்துக் கொள்ளலாம். தனியார்மயம், இடஒதுக்கீட்டின்மை, 2030-க்குள் கல்வி நிறுவனங்கள் மூடப்படும் என்றெல்லாம் கூறும் இந்த வரைவு அறிக்கையில், பெண்கள், தாழ்த்தப்பட்டோர் கல்வி குறித்து கூறப்படவில்லை. அதேபோன்று தமிழர்களின் ஆகச் சிறந்த நூலாக திருக்குறள் குறித்தோ அல்லது நன்னெறிக் கல்விமுறை குறித்தோ எங்கும் கூறப்படவில்லை.

ராஷ்ட்ரிய சிக்ஷா ஆயோக் என்ற பெயரில் அமைக்கப்படும் உயர்கல்வி ஆணையம் எடுக்கும் முடிவுகளே இறுதியானது. இதன் தலைவராக பிரதமர் இருப்பார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையைப் போன்று ஒரே நாளில் கல்வித் துறையை தலைகீழாக மாற்றிவிடும் அளவிற்கு அதிகாரம் வாய்ந்ததாக இந்த அமைப்புத் திகழும்' என்றார்.

ABOUT THE AUTHOR

...view details