சென்னை:இயக்குநர் முத்தையாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய செல்வகுமார், இயக்குநராக அறிமுகமாகும் 'பம்பர்' படத்தில் வெற்றி, ஷிவானி நாராயணன், ஜி.பி.முத்து ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஜூலை 7-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் நிலையில், பம்பர் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று (ஜூன் 25) சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், முத்தையா, மந்திரமூர்த்தி, கணேஷ் பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பங்கேற்கவில்லை. விழாவில் பங்கேற்ற அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், திருக்குறள் உள்பட 2 புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. பம்பர் படத்தின் டிரெய்லரை இயக்குநர் கே.பாக்யராஜ் உள்பட சிறப்பு விருந்தினர்கள் விழா மேடையில் வெளியிட்டனர்.
சிறப்பு விருந்தினரான இயக்குநர் முத்தையா மேடையில் பேசுகையில், "70, 80-களில் பிறந்த எல்லோரும் படம் பார்த்து இயக்குநர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டதற்கு மகேந்திரன், பாக்யராஜ் தான் முன்மாதிரியாக இருப்பார்கள். பாக்யராஜ் இருக்கும் மேடையில் நான் பேசுவது பெருமையாக இருக்கிறது.
என்னுடன் பணியாற்றிய செல்வகுமாரின் முதல் படம் இது. நெல்லை பிண்ணனியில் படம் பண்ணுங்கள் என்று நான் செல்வாவிடம் கூறினேன். பம்பர் படத்தின் கதையை அவர் என்னிடம் சொன்னார். இந்த படத்துக்கான கதையை பண்ணுங்கள், இல்லை என்றால் அதை நான் தயாரிக்கிறேன் என்றேன். கவுதம் கார்த்திக்கை கதாநாயகனாக வைத்து இந்த படத்தை உருவாக்கலாம் என்றிருந்தோம். ஆனால் செல்வா அழைப்பால் நடிகர் வெற்றி பம்பரில் கதாநாயகராக நடித்தார்” என்றார்.
மேலும், அவருடைய முதல் படம் குட்டிப்புலி என்றும் தான் இந்த மேடையில் இருப்பதற்கு காரணம் சசிகுமார் தான் என்றும் கூறிய அவர் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் இயக்குநர்களுக்கு வெற்றி மாதிரியான நடிகர்கள் வாய்ப்பு தர வேண்டும் என இயக்குநர் முத்தையா கூறினார்.
பின்னர், நடிகர் வெற்றி மேடையில் பேசுகையில், "முதல் முறையாக நடனம் ஆட முயற்சி செய்துள்ளேன். இது கமர்ஷியல் படம் மற்றும் இந்த காலகட்டத்தினர் பார்க்க வேண்டிய படம். இது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. படத்தில் புலிப்பாண்டி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். புலிப்பாண்டி என்பவர் பணத்துக்காக எதையும் செய்யும் ஒருவர். இயக்குநர் தான் உண்மையான புலிப்பாண்டி. அவர் ஆரம்பத்தில் அப்படி இருந்து பின் திருந்தி உள்ளார். படம் வெற்றி பெற படத்துக்கு ஆதரவு கொடுங்கள்” என்றார்.