சென்னை:சுரேஷ்.ஜி இயக்கத்தில் மரியம் ஜார்ஜ், சார்லி, எம்.எஸ் பாஸ்கர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் எறும்பு. இத்திரைப்படம் இரண்டு சிறுவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களை பேசியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் பங்கேற்றார்.
நடிகர் மரியம் ஜார்ஜ் மேடையில் பேசும் போது, “இது குழந்தைகளுக்கான படம். அனைவரும் பார்க்க வேண்டிய படம். படக்குழு நன்றாக உருவாக்கம் செய்து உள்ளனர். இந்த படம் தஞ்சாவூர் சுற்று வட்டாரங்களில் படமாக்கப்பட்டது. எனக்கு இந்த படத்தில் நடித்தது மகிழ்ச்சியை தருகிறது” என்றார்.
பின்னர் பேசிய நடிகர் எம்.எஸ் பாஸ்கர், “எனக்கு இந்த கதாபாத்திரத்தில் நடித்தது பெரிய சந்தோஷம். டப்பிங் கலைஞனாக இருந்த நான், தற்போது மைத்துனர் சார்லியுடன் இணைந்து நடித்தது ரொம்ப சந்தோஷம். மேலும் சமீபத்தில் கந்து வட்டி கொடுமையினால் ஒரு குடும்பம் தீயிட்டு தற்கொலை செய்து கொள்ளும் போது குழந்தை தவழ்ந்து சென்றது தான் கொடுமையிலும் கொடுமை. நமக்கே நம் மீது வெறுப்பு வருகிறது. அந்தக் கதையை கூறும் இந்தப் படம் நல்ல படம். யாரும் கடன் வாங்கக் கூடாது என்பது எனது வேண்டுகோள்.
மிகச் சரியான கதாபாத்திரத்தை இயக்குநர் வடிவமைத்து, நடிகர்கள் அந்த கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப் படம் ஆக வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.
அவரைத் தொடர்ந்து நடிகர் சார்லி பேசும் போது, “இந்த நிகழ்ச்சியே எனக்கு மகிழ்ச்சியான நிகழ்ச்சியாக இருக்கிறது.2019-ல் ஒரு இளைஞர் வந்து உங்களுக்காக ஒரு கதையை உருவாக்கி இருக்கிறேன் என்றார். ஒரே நாளில் முடித்து விடுவேன் என்றார். காட்டுமன்னார் கோயில் அருகே அறந்தாங்கி கிராமத்தில் படமாக்கப்பட்டது. சுரேஷ் என்ற படைப்பாளிக்கு அந்த கிராமமே உதவியது. நடிகர்களுக்கு நல்ல படங்கள், படைப்பு வருவது நல்ல படைப்பாளிகள் கையில் உள்ளது.