சென்னை: புதுப்பேட்டை வேலாயுதம் தெருவைச் சேர்ந்தவர் கிறிஸ்துராஜ் (43). இவர் ராஜ் சிட் பண்ட் மற்றும் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவர் தனது பைனான்ஸ் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்த நூற்றுக்கணக்கானோரை ஏமாற்றி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
சீட்டு முதிர்வடைந்த பின்னும் முதலீட்டாளர்களுக்கு கிறிஸ்துராஜ் பணம் தராமல் ஏமாற்றி வந்தது தொடர்பாக சுமார் 17 பேர் கடந்த 6ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பின் பணத்தை இழந்த பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் கொண்ட கும்பல் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள கிறிஸ்துராஜின் உறவினர் சஜின் என்பவர் நடத்தி வரும் தனியார் உணவகத்திற்குச் சென்று, கிறிஸ்துராஜிடம் பேச வேண்டுமெனக் கூறி அவரை அழைத்து வருமாறு கூறியுள்ளனர்.
அவரை அழைத்து வர மறுப்பு தெரிவித்ததால் சஜீனை இருசக்கர வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உணவகத்தின் ஊழியரான சையூல் இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் அளித்தார்.