திருப்பூர்:அழகுமலை கிராம பஞ்சாயத்து தலைவர் தூயமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “திருப்பூர் மாவட்டம் அழகுமலையைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் கடந்த சில வருடங்களாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தி வருகிறார். தங்களது கிராமத்தில் இருந்து யாரும் கலந்துகொள்ளாத நிலையில் பணம் பறிக்கும் நோக்கத்தில் போட்டிகளை நடத்துகிறார்.
பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களிடம் இருந்து 500 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை கட்டணமாக வசூல் செய்கிறார். போட்டிகளுக்காக மதுரையில் இருந்து மாடுகளும், சிவகங்கையில் இருந்து மாடுபிடி வீரர்களும் தினக்கூலிக்கு அழைத்து வரப்படுகின்றனர். உரிய பாதுகாப்பு மற்றும் அனுமதி இல்லாமல் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியால் பெண்கள் முதல் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆட்சியருக்கு கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் சுவாமிநாதன் ஏப்ரல் 24ம் தேதி அழகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என தன்னிச்சையாக அறிவித்துள்ளார்.
அதனால், உரிய அனுமதி இல்லாமல் நடத்தப்பட உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேலுமணி மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு, ’’எதன் அடிப்படையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கப்பட்டது என பதிலளிக்க’’ உத்தரவிட்டு வழக்கை நான்கு வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க:‘தமிழ்நாடு அரசிதழில் இன்றே ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் வெளியிடப்படும்’ - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!