சென்னை: சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (நவம்பர் 25) செய்தியாளரைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “தெற்கு வங்க கடற்பகுதியில் (3.1 கி.மீ. உயரம் வரை) நிலவிய வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி அதே இடத்தில் நீடிக்கின்றது.
இது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை. இதன் காரணமாக இன்று (நவமபர் 25) ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
ஏனைய கடலோர மாவட்டங்களான புதுச்சேரி, தென் மாவட்டங்களில், அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நவம்பர் 26: நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி மாவட்டங்கள் - புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள் - காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு, நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31, குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். நாளை சென்னையில் ஒருசில இடங்களில் கன மழை இருக்கும்.