சென்னைசைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பெண்கள் பங்கேற்பு, பிரதிநிதித்துவம் மற்றும் அதிகாரமளித்தல் என்னும் தலைப்பில் தேசிய கருத்தரங்கத்தை சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்து பேசும்போது, இன்றைய சூழ்நிலையில் மிக அவசியமான தலைப்பில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றும், இந்தியாவில் பல்வேறு துறைகளில் பெண்களுக்கான தளம் விரிவடைந்து உள்ளதாகவும், தமிழ்நாடு வரலாற்றில் பெண்கள் ஆற்றிய பணிகள் மற்றும் அவர்களின் பெருமைகள் குறித்து விழாவில் பேசினார்.
மேலும், ”வரலாற்றில் நிற்கும் அளவிற்கு பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சியில் கொண்டு வரப்படுள்ளது. சம வாய்ப்பு, சம உரிமை வழங்க வேண்டும் என்பதற்காகப் பல்வேறு திட்டங்களை பெண்களுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வழியில் நின்று நிறைவேற்றி வருகிறார். பாலின வேறுபாடு இருக்கக் கூடாது என்பதற்காக பல்வேறு முன்னெடுப்புகளை முதலமைச்சர் எடுத்துவருகிறார்.
திமுக ஆட்சியில் பெண்கள் முன்னேற்றத்திற்கு திட்டங்கள் அதிகளவில் வகுக்கப்பட்டன. பெண் சொத்துரிமை, உள்ளாட்சி தேர்தல் ஒதுக்கீடு, சுய உதவிக்குழுக்கள் எனப்பல்வேறு திட்டங்களை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கொடுத்தார்கள். அவர் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர்கள் இத்துறையின் பெயரினை சமூகநலத்துறை, பெண்கள் முன்னேற்றத்துறை என பெயர் மாற்றினார்கள், இலவசப்பேருந்து பயணம், நகர்ப்புறவாழ்விட சார்பில் வழங்கப்படும் வீடுகள் பெண்கள் பெயரில் வழங்கப்படும் என அறிவித்தார்கள்.