சென்னை:அயனாவரம் ஏகாங்கிபுரம் பகுதியை சேர்ந்தவர் வாணி (41). இவரது கணவர் ரமேஷ் (38) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். வாணி சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் வாணி அடிக்கடி செல்போன் பேசி வந்ததால் அவரது கணவர் ரமேஷ் சந்தேகமடைந்து வாணியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதே போல கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி கணவர் மனைவிக்குள் இடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரத்தில் கணவர் ரமேஷ் வாணியை கொலை செய்துவிட்டு மனைவியின் உடலை துணிகளை மூடி மறைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு பிறகு வீட்டில் துர்நாற்றம் வீசவே, அவரது மகன் எதனால் என வீடு முழுவதும் தேடிய போது வாணி அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வாணியின் தாய் சுலோச்சனா ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவான ரமேஷை ஓட்டேரி காவல் ஆய்வாளர் ஜானிசெல்லப்பா தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
குறிப்பாக ரமேஷின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவரது சொந்த ஊரான உசிலம்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் அவரை தேடிய போதும் தலைமறைவான ரமேஷ் குறித்த ஒரு துப்பும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. மேலும் ரமேஷ் செல்போன் பயன்படுத்தி யாரையும் தொடர்பு கொள்ளாமல் இருந்ததால், போலீசார் ரமேஷை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில் போலீசார் துப்பு கிடைக்காமல் தவித்து வந்ததைத் தொடர்ந்து, ரமேஷ் அவரது மகனின் நண்பர் ஒருவருக்கு ஜிபே மூலமாக பணம் அனுப்பியதை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் அதில், அவருக்கு அனுப்பிய பணம் பிச்சை எடுத்து சம்பாதித்த பணம் என குறிப்பிட்டிருந்தார்.