சென்னை அண்ணா நகர் 6ஆவது அவென்யூவில் வசித்துவருபவர் ஸ்ரீதேவி உன்னிதன் (84). கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் வீட்டின் மேற்பகுதியை பிள்ளைகளுக்காக ஒதுக்கிவிட்டு கீழே இவர் மட்டும் தனியாக வசித்துவருகிறார். இவருக்கு மேல் அயனம்பாக்கத்தில் 23 சென்ட் நிலம் உள்ளது.
இந்நிலையில் நேற்று மதியம் ஸ்ரீதேவி உன்னிதன் வீட்டிற்கு காவல் ஆய்வாளர் உடையில் நண்பர்கள் இருவருடன் குடிபோதையில் சென்றனர். மேல் அயனம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீதேவியின் இடம் தனது பூர்விகச் சொத்து எனவும், அந்த இடம் தொடர்பான ஆவணங்களைத் தன்னிடம் காட்ட வேண்டும் எனவும் கூறி முன்னுக்குப் பின் முரணாகப் பேசி தகராறு செய்துள்ளார்.
இதனையடுத்து கீழ் வீட்டில் ஏதோ பிரச்சனை ஏற்படுவதை கேட்டு மேல் வீட்டிலிருந்து வந்த ஸ்ரீதேவியின் பேரன் சைலேஷ், வாக்குவாதம் செய்த நபரிடம் காவல் துறைக்குத் தகவல் அளிப்பதாக மிரட்டவே அங்கிருந்து அவர்கள் மூவரும் தப்பியோடியுள்ளனர்.
அப்போது அவர்களைத் துரத்திச் சென்ற சைலேஷ் 200 அடி தூரத்தில் மூவரில் ஒருவரை மட்டும் மடக்கிப் பிடித்து ரோந்துப் பணியில் இருந்த காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து அந்த நபரை ரோந்துப்பணி காவலர்கள் திருமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.