சென்னை: பாரத ஸ்டேட் வங்கி மதுரை நிர்வாக அலுவலகத்தில் சிறப்பு உதவியாளராக பணியாற்றிய ராமமூர்த்தி உள்பட மூன்று ஊழியர்கள், மதுரையில் உள்ள பிற கிளைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமமூர்த்தி உள்ளிட்ட மூவரும், 2014ம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணி முதல் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கலைந்து செல்லும்படி அவர்களிடம் வங்கி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி வரை போராட்டத்தை தொடர்ந்ததால், மூவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து ராமமூர்த்தி தொடர்ந்த வழக்கை விசாரித்த, தொழிலாளர் நீதிமன்றம், அடுத்த கீழ்நிலை ஊதியத்துடன் அவரை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து பாரத ஸ்டேட் வங்கி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இடமாற்றம் என்பது பணி விதி என்ற போதும், ராமமூர்த்தி உள்பட மூவரும் வங்கி பணி நேரம் முடிந்த பின் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தர்ணாவில் ஈடுபட்டதால் வாடிக்கையாளர்களுக்கு எந்த சங்கடமும் ஏற்படவில்லை எனவும், அவர்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.