சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவரான அன்புசூர்யா கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இரவு நேர பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு, நள்ளிரவு 3 மணியளவில் மெரினா கடற்கரை சாலையில் குடிபோதையில் வேகமாக காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது கார் மோதியதில் இரண்டு மீன் வியாபாரிகள், ஒரு தலைமை காவலர் உயிரிழந்தனர்.
மேலும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்தன. இதுதொடர்பாக அன்புசூர்யா மீதும், அவருடன் காரில் பயணித்த அவரது மூத்த சகோதரி லட்சுமி மற்றும் நண்பர் செபஸ்டியன் கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் மீது சென்னை காவல் துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில் காரை ஓட்டாமல் பயணம் மட்டுமே செய்த நிலையில், தன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி லட்சுமி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிராகரித்தது. இவ்வாறு முதன்மை அமர்வு நீதிமன்றம் நிராகரித்த உத்தரவை மறு ஆய்வு செய்து, தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் லட்சுமி வழக்கு தொடர்ந்தார்.