சென்னை:சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்காத காவல்துறை தனது கடமையை செய்ய தவறியதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்நிலையில், சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு எதிராக திராவிட கொள்கை ஒழிப்பு மாநாடு நடத்த சென்னை திருவொற்றியூரை சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்துள்ள உத்தரவில், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று கூட்டம் நடத்தி அதில் ஆவேசமாக பேசியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறியதால், தற்போது திராவிடக் கொள்கையை ஒழிக்கக் கூட்டம் நடத்தி அதை எதிர்க்க அனுமதி கோரப்பட்டு உள்ளது.
பொது மக்கள் மத்தியில் அவதூறுகளை உருவாக்கும் வகையில் கருத்துகளை பரப்புவதற்கு நீதிமன்றங்கள் உதவுமென யாரும் எதிர்பார்க்க கூடாது. சனாதன தர்மத்தை ஒழிப்பதற்காக நடைபெற்ற கூட்டத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலரும், அமைச்சர்களும் பங்கேற்றதற்கு எதிராக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களுக்கு எதிராக காவல்துறை வழக்குப்பதிவு செய்யாதது, காவல்துறையின் கடமையை மீறிய செயலாகும் என்றார்.