சென்னை: புதுச்சேரி மாநிலத்தில் காரைக்காலில் உள்ள ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவில், பத்து நாட்களும் ஸ்ரீ சோமாஸ்கந்தர், ஸ்ரீ உமையாம்பிகை, ஸ்ரீ கந்தர் சிலைகளை ஒரே வாகனத்தில் வைத்து கோயிலைச் சுற்றி, உலா வருவது வழக்கம்.
இது தொடர்பாக அரசும், உயர் நீதிமன்றமும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்துள்ள நிலையில், இந்த ஆண்டு, திருவிழாவின் முதல் நாள், 9ஆவது நாள் மற்றும் 10ஆவது நாள் ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே சுவாமி உலா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், 10 நாட்களும் சிலைகளை உலா கொண்டு வரக் கோரி பால சர்வேஸ்வர குருக்கள் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்த போது, புதுச்சேரி அரசு தரப்பில், 10 நாட்களும் சாமிகளின் உலாவை நடத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதி, ’’உத்தரவுப் பிறப்பித்தால் மட்டும் போதாது என்றும், அதை அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்’’ என புதுச்சேரி அரசுக்கு அறிவுறுத்தி உள்ளார்.