சென்னை:குடும்பத்தையும், வீட்டையும் நிர்வகிக்கும் தலையாய பொறுப்பினை இல்லத்தரசிகளே பெரும்பாலும் மேற்கொள்கின்றனர். கணவன், குழந்தைகள் மற்றும் வீட்டையும் பராமரிக்கும் பெண்கள் ஒரு குடும்பத்தின் கண்களாக இருக்கின்றனர். அவர்களின் மனநிலை நலமாக இருக்க வேண்டியது அவசியம். குடும்பத்தின் மகிழ்ச்சியும் இல்லத்தரசிகளின் மகிழ்ச்சியைச் சார்ந்தே உள்ளது. இவ்வாறு இருக்கும்போது சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவை அறிவித்துள்ளது.
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றிய கண்ணையன் நாயுடு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில் அவர் தான் வெளிநாட்டில் கிடைத்த வேலையில் சம்பாதித்து அனுப்பி வைத்த தொகையைப் பயன்படுத்தி கணவன் பெயரில் மனைவி வாங்கிய சொத்துக்களில் மனைவிக்கு உரிமையில்லை எனக் கூறி, கணவன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
அதில், 'தான் வெளிநாட்டில் 1983 முதல் 1994 வரை சம்பாதித்த பணத்தில் வாங்கிய சொத்துகள் அனைத்தும் தனக்கு மட்டுமே அனுபவிக்க உரிமை உள்ளது. அதில் யாரும் உரிமை கோர முடியாது. ஆனால், கீழமை நீதிமன்றம் தனது மனைவிக்கும் பங்கு உள்ளது எனத் தீர்ப்பளித்துள்ளது. அதனால், கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்' என அந்த மேல்முறையீட்டில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கணவன் சம்பாதிப்பதும், மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தைக் கவனிப்பதும் பொதுவானது என்றார். குடும்பத்தை மனைவி கவனிப்பதால் தான் கணவரால், தனது பணியை முழு மன நிறைவோடு செய்ய முடிகிறது என்ற அவர் கணவனின் சம்பாத்தியத்தில் வாங்கும் சொத்தில் மனைவிக்கும் சம பங்கு பெற உரிமை உள்ளது எனக் கூறியுள்ளார்.