சென்னை: விழுப்புரம் அருகே டெண்டர் ஒதுக்கப்படாத பகுதிகளில் கருவேல மரங்களை வெட்டுவதை தடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் வளர்ந்து வரும் கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு உத்தரவிட்டது.
அதன்படி, கருவேல மரங்களை அப்புறப்படுத்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டு தனியார் பங்களிப்புடன் இணைந்து தமிழக அரசு அகற்றி வருகிறது. கருவேல மரங்களை அப்புறப்படுத்துவதற்கு தமிழக அரசு டெண்டர் முறையையும் பயன்படுத்தி வருகின்றது.
இந்நிலையில், விழுப்புரத்தை சேர்ந்த திலீப்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், முட்ராம்பட்டு ஏரியில் 6 ஹெக்டேரில் வளர்ந்து இருந்த கருவேல மரத்தை அகற்றுவதற்கான டெண்டரை சுப்ரமணி எடுத்ததாக குறிப்பிட்டு உள்ளார். மேலும் டெண்டர் எடுத்த பகுதியை விட்டு விட்டு, வேறு இடத்தில் 52 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள 30 லட்ச ரூபாய் மதிப்பிலான கருவேல மரங்களை வெட்டத் துவங்கி உள்ளதாகவும், இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இதையும் படிங்க:சென்னையில் வாகனங்களுக்கான லேன் விதிகளை அமல்படுத்த கோரிக்கை; தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
ஏலம் எடுத்த இடத்தை தவிர மற்ற இடங்களில் உள்ள கருவேல மரங்களை வெட்ட தடை விதிக்கவும், சுப்ரமணி மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என அவர் அந்த மனுவில் தெரிவித்து உள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்கபூர்வாலா, நீதிபதி பி.டி. ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மேலும் இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில், சில இடங்களில் பொதுப் பணித் துறையே மரங்களை வெட்டி உள்ளது என்றும், சுப்ரமணிக்கு ஒதுக்கப்பட்ட ஒப்பந்ததின் அவகாசம் ஆகஸ்ட் மாதம் வரை உள்ள நிலையில், அவர் இன்னும் வெட்ட தொடங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஏலம் எடுக்காத பகுதியில் கருவேல மரங்கள் வெட்டப்படுகிறதா என்பதும் கண்காணிப்பட்டு வருவதாகவும் தமிழக அரசின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, டெண்டர் ஒதுக்கப்பட்ட பகுதியை தவிர்த்து, மற்ற பகுதிகளில் மரம் வெட்டினால் நடவடிக்கை எடுப்பது அரசின் கடமை என அறிவுறுத்திய நீதிபதிகள், ஏலம் எடுக்காத பகுதிகளில் மரம் வெட்டுவதை தடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க:Coimbatore car blast case: சிறப்பு நீதிமன்றத்தில் மேலும் 5 பேர் மீது NIA குற்றப்பத்திரிக்கை தாக்கல்
இதையும் படிங்க :தேசிய தடகளப் போட்டியில் திருவள்ளுவர் பல்கலைக்கழக அணி வெள்ளிப் பதக்கம்!