சென்னை: 'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் கேரள பெண்கள் மதமாற்றத்தில் ஈடுபட்டு தீவிரவாத அமைப்புகளில் சேர்வது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலர் பெரும் எதிர்ப்புகளை சந்தித்துள்ளது.
இந்நிலையில் மதச்சார்பின்மை கொண்ட கேரள மாநிலத்தில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக இந்த படத்தின் டிரைலர் அமைந்திருப்பதாகவும், சங்பரிவாரின் கொள்கையை பிரச்சாரம் செய்வதற்காகவே எடுக்கப்பட்ட படம் தான் தி கேரள ஸ்டோரி என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.
இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் இதனை தடை செய்ய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்த நிலையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாடு முழுவதும் நாளை 5ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இத்திரைப்படத்தை வெளியிட்டால் எதிர்ப்புகள் ஏற்படக்கூடும் என அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்துள்ளது.