சென்னை:திரைப்பட காமெடி நடிகரான சூரி, நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டி.ஜி.பி-யுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 2.70 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக கடந்த மார்ச் மாதம் அடையாறு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் மீது நடவடிக்கை இல்லையெனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியதுடன், 6 மாதகாலத்துக்குள் முடிக்க உத்தரவிட்டது. இவ்வழக்கு, சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுவரை நடிகர் சூரி மூன்று முறைக்கும் மேல் இவ்வழக்கு தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள மத்திய குற்றப்பிரிவில் விசாரணைக்கு ஆஜராகி பதிலளித்துள்ள நிலையில், இன்றும் நடிகர் சூரி மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற விசாரணைக்கு பின் வெளியே வந்த சூரி செய்தியாளர்களை சந்தித்தார்.