தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலை வழங்குக; இல்லையேல் ஆட்சியரின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்க - நீதிபதி உத்தரவு - Heir work

சென்னை: மரணமடைந்த அரசு ஊழியரின் மகனுக்கு டிசம்பர் மாதத்துக்குள் வாரிசு வேலை வழங்கவில்லை என்றால், ஜனவரி மாதம் முதல் மாவட்ட ஆட்சியரின் ஊதியத்திலிருந்து பிடித்தம்செய்து வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

HC
HC

By

Published : Sep 11, 2020, 11:03 AM IST

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்பவரின் தந்தை கிராம உதவியாளராகப் பணியில் இருந்தபோது, 2003ஆம் ஆண்டு மரணமடைந்தார். இதையடுத்து கருணை அடிப்படையில் வாரிசு வேலை கேட்டு ரவி தாக்கல்செய்த மனு நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ரவி வழக்குத் தொடர்ந்தார். 2011ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்துவந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில், “தமிழ்நாடு அரசு சில அரசுப் பணிகளுக்கு 2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை தடைவிதித்திருந்தது.

பின்னர் இந்தத் தடை 2007ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி நீக்கப்பட்டு, கருணை அடிப்படையில் விண்ணப்பம் செய்ய 3 மாதம் கால அவகாசம் வழங்கியது. இந்த 3 மாத கால அவகாசத்துக்குள் மனுதாரர் வாரிசு வேலைக் கேட்டு விண்ணப்பம் கொடுக்கவில்லை என்று அரசுத் தரப்பில் கூறுவதை ஏற்கமுடியாது.

தடை காலத்தில் மனுதாரர் தந்தை இறந்துள்ளார். வாரிசு வேலை கேட்டு 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி மனுதாரர் அரசுக்கு விண்ணப்பம் கொடுத்துள்ளார். இந்த மனுவை உயர் அலுவலருக்கு திட்டக்குடி வட்டாட்சியர் பரிந்துரைத்துள்ளார். இதன்பின்னரும் தனக்கு வேலை கிடைக்காததால், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியுள்ளார்.

ஆனால், இந்த மனுவை அடிப்படையாக வைத்துக்கொண்டு, மனுதாரர் தந்தை இறந்து 3 ஆண்டுக்குள் வாரிசு வேலைக் கேட்டு விண்ணப்பம் செய்யவில்லை. அரசு வழங்கிய 3 மாத கால அவகாசத்துக்குள் விண்ணப்பம் செய்யவில்லை என்று காரணம் கூறி, வாரிசு வேலை வழங்க மறுத்து தமிழ்நாடு அரசு 2011ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது.

மனுதாரர் வேலைக் கேட்டு 2005ஆம் ஆண்டே விண்ணப்பம் கொடுத்துள்ளார். அப்போது, அரசுப் பணி நியமனத்துக்குத்தான் தடை இருந்ததே தவிர, வாரிசு வேலை கேட்டு விண்ணப்பம் செய்ய தடை எதுவும் இல்லை. எனவே, வாரிசு வேலை வழங்க மறுத்து 2011ஆம் ஆண்டு பிறப்பித்த அரசு உத்தரவை ரத்துசெய்யப்படுகிறது.

மனுதாரருக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் அரசுப் பணி வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கவில்லை என்றால், 2021 ஜனவரி 1ஆம் தேதிமுதல் மனுதாரர் ரவி அரசு ஊழியராகக் கருதப்படுவார். அவருக்கு கடைநிலை ஊழியரின் ஊதியத்தை வழங்க வேண்டும். இந்த ஊதியத்தை, இந்த உத்தரவை அமல்படுத்தாத மாவட்ட ஆட்சியரின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்ய வேண்டும்.

மேலும், மனுதாரருக்கு வாரிசு வேலை டிசம்பர் மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. இதைப் பணி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்ற உத்தரவாகக் கருத வேண்டாம் என்பதை கடலூர் ஆட்சியருக்கு மீண்டும் தெளிவுப்படுத்தப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details