சென்னை: பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் செல்வாக்கைப் பெருக்கவும், தனி நபர் துதிபாடவும் பல்கலைக்கழக வளாகங்கள் பயன்படக் கூடாது. டிசம்பர் 1ஆம் தேதி பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை பல்கலைக்கழக வளாகங்களில் சுய புகைப்படம் (Selfie Point) எடுத்துக் கொள்ளும் அமைப்பை ஏற்படுத்தக் கோரியுள்ளது.
இந்தியாவின் சமீபத்திய சாதனைகளை விளக்கி, ஏற்பு அளிக்கப்பட்ட வடிவங்களில் மட்டுமே இந்த செல்ஃபி பாயிண்ட் அமைக்க வேண்டும் என்ற கட்டளை உள்ளடக்கியதாகப் பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை அமைந்துள்ளது. அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் காட்சிப்படுத்தும் ஏற்பாட்டைப் பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பும் அதிகாரம் எந்த சட்டத்தாலும் பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு வழங்கப்படவில்லை.
சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டிய பல்கலைக்கழக மானியக் குழு, சட்டத்திற்குப் புறம்பாகத் தனது எல்லைகளைக் கடந்து மத்திய அரசின் ஆட்சிப் பொறுப்பில் உள்ள கட்சியின் பரப்புரைப் பணிகளை மேற்கொள்ளும் அமைப்பாகச் செயல்படுவது மிகவும் ஆபத்தானது.
சமூக மாற்றம், நாட்டின் பன்முக வளர்ச்சி, மனிதக் குல மேம்பாடு, கல்விச் செயல்பாடு ஆகியவைக்கான வளாகமே பல்கலைக்கழகம். அரசின் கொள்கைகளை ஆராய்ந்து, பகுத்தும், தொகுத்தும் ஆய்வேடுகளை வெளியிடும் தன்னாட்சி அமைப்புதான் பல்கலைக்கழகம். அத்தகையப் பல்கலைக்கழகங்களை மத்திய அரசின் சாதனைகளைப் பரப்புகின்ற பணியினைச் செய்யும் அமைப்புகளாக மாற்ற முற்படுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.