சென்னை: தமிழ்நாட்டில் இருந்து தொன்மை வாய்ந்த சிலைகளை வெளிநாட்டுக்கு கடத்தி விற்பனையில் ஈடுபட்டிருந்த சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரை, இன்டர்போல் உதவியுடன் சிபிஐ ஜெர்மனியில் வைத்து கைது செய்தது. கைது செய்யப்பட்ட சுபாஷ் கபூரை சிபிஐ கடந்த 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையினரிடம் ஒப்படைத்தது.
சுபாஷ் கபூர் மீது தமிழ்நாட்டில் மட்டும் சிலை கடத்தல் தொடர்பாக ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அது தொடர்பான நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. ஐந்து வழக்குகளில், உடையார்பாளையம் சிலை கடத்தல் வழக்கில் கடந்த 2017ஆம் ஆண்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜெர்மனி குடிமகனான சுபாஷ் கபூரை இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஜெர்மனி அரசு கடந்த 2011ஆம் ஆண்டு ஒப்படைத்தது. ஆனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாகி வழக்கு விசாரணை முடிக்கப்படாததால் சுபாஷ் கபூரை திரும்ப அனுப்புமாறு தெரிவித்துள்ளது. ஆனால் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
வழக்கினால் தொடர்ந்து காலதாமதம் ஆவதால், ஜெர்மனி அரசு குற்றவாளிகளை பரிமாறிக் கொள்வதற்கான சட்டபூர்வமான பரஸ்பர ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக இந்திய அரசுக்கு தெரிவித்துள்ளது. இதனால் இந்திய அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் வின்யா குவார்ட்டா இந்த விவகாரம் தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புக்கு கடிதம் எழுதி இருக்கிறார். தொடர்ந்து உடையார்பாளையம் கடத்தல் வழக்கு குறித்து விரைவாக விசாரணையை முடிக்குமாறு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிறப்பு நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.