சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி வரும் 1,300 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களைப் பதவி இறக்கம் செய்யத் தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவை கைவிட வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவீத்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என மூன்று நிலைகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். 1977ஆம் ஆண்டு வரை 11+1 என்ற அளவிலிருந்த மேல்நிலைக் கல்வி, 1978-ஆம் ஆண்டில் 10+2 என்ற அளவுக்கு மாற்றப்பட்டது. அப்போது தான் தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகள் அறிமுகம் செய்யப்பட்டன.
பத்தாம் வகுப்பு வரையிலான உயர்நிலைப் பள்ளிகளுக்கும், 12-ஆம் வகுப்பு வரையிலான மேல்நிலைப் பள்ளிகளுக்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களே தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். முதுநிலை ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் பணிமூப்பு அடிப்படையில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்படும் நிலையில், உயர்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெறும் போது, அவர்கள் காலியாக உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களில் நியமிக்கப்படுவர். அண்மைக்காலம் வரை இவ்வழக்கம் நீடித்தது.
இந்த முறையை எதிர்த்து 2015-16ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது என்றும், பட்டதாரி ஆசிரியர்களில் மூத்தவரைத் தான் அப்பதவியில் நியமிக்க வேண்டும் என்றும் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பை எப்போது முதல் செயல்படுத்த வேண்டும் என்பதில் தெளிவில்லை.
ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை, அது வழங்கப்பட்டதிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செயல்படுத்தத் தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. அதனால், தமிழ்நாடு முழுவதும் உயர்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி வரும் 1300 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அந்தப் பணிகளிலிருந்து நீக்கப்படவுள்ளனர்.