தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடக்க முடியாத நிலையிலும் சாதிக்க துடித்து 12 ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதும் ’சிந்து’ - Sindhu'

கோடம்பாக்கத்தில் விபத்தினால் நடக்க முடியாத நிலையிலுள்ள கைப்பந்து வீராங்கனையும், 12ஆம் வகுப்பு மாணவியுமான ’சிந்து’ துணையுடன் பொதுத் தேர்வை எழுதி வருகிறார்.

நடக்க முடியாத நிலையிலும் சாதிக்க துடித்து 12 ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதும் சிந்து
நடக்க முடியாத நிலையிலும் சாதிக்க துடித்து 12 ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதும் சிந்து

By

Published : May 6, 2022, 12:20 AM IST

Updated : May 6, 2022, 8:28 AM IST

சென்னை:மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இடுப்புக்கு கீழ் செயல் இழந்து முடங்கிய நிலையிலும் 12ம் வகுப்பு மாணவியான சிந்து பொதுத் தேர்வை உதவியாளர் துணை கொண்டு எழுதினார். மேலும், தனது லட்சியமான ராணுவத்தில் சேர முடியாவிட்டாலும், குடிமைப்பணியில் சேர்ந்து சாதிப்பேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விபத்தினால் நேர்ந்த துயரம்..!:கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் சதிஸ் என்பவரின் மகள் தான் சிந்து . இவர் தியாகராய நகரில் உள்ள வித்யோதயா மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்தார். அப்போது கடந்த 2020 ம் ஆண்டு 3 வது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார். அதனால் தற்போது நடமாட முடியாத நிலையில் உள்ளார்.

தோழிகளுடன் விளையாடிய போது, தனது வீட்டின் அருகில் உள்ள கட்டடத்தில் இருந்து தவறி விழுந்ததில், இடுப்புக்கு கீழ் செயல் இழந்து முடங்கினார். அதனைத் தாெடர்ந்து அரசு மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தாலும், முழுவதும் குணமடையாத நிலையில், பெற்றோர்கள் தூக்கிச் சென்று விடும் நிலையில் தான் உள்ளார்.

இந்நிலையிலும் தனது மனவலிமையால், வாழ்க்கைக்கு கல்வித்தான் முக்கியம் என்பதால், தற்பொழுது 12 ம் வகுப்பு பொதுத் தேர்வினை பள்ளியின் தலைமை ஆசிரியர் துணையுடன் எழுதி வருகிறார். மேலும், இருசக்கர வாகனத்தில் தேநீர் விற்கும் தந்தை, குடும்பத்தை கவனிக்கும் தாய் என குடும்ப வறுமையும் தாண்டி, வாழ்க்கையில் சாதிப்பதற்கு தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் துணிவுடன் கூறுகிறார் மாணவி சிந்து.

துயரத்தை எண்ணி வருந்த கூடாது..!: இது குறித்து மாணவி சிந்து கூறும்போது, ” வாழ்வில் நடந்த துயரமான சம்பவங்களை மீண்டும் எண்ணி வருத்தம் அடையக்கூடாது. எனக்கு பள்ளியின் ஆசிரியர்கள், ரூபன் ஆகியோர் படிப்பதற்கு சொல்லித்தருகின்றனர். அதனால் நன்றாக படித்து தேர்வினை உதவியாளர் துணையுடன் எழுதுகிறேன்.

நடக்க முடியாத நிலையிலும் சாதிக்க துடித்து 12 ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதும் ’சிந்து’

கணக்குபதிவியில், தணிக்கையியல் பாடத் தேர்விற்கு சொல்வதை எழுதுவபர் அந்த பாடத்தின் ஆசிரியராக இருந்தால் நன்றாக இருக்கும். எனது லட்சியம் ராணுவத்திற்கு செல்ல வேண்டும் என்பதாகும். ஆனால் தற்பொழுது முடியாது என்பதால், குடிமைப்பணியில் சேர்ந்து சேவை செய்ய வேண்டும். மேலும், நான் மீண்டும் விளையாட முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனது உடல்நிலை முழுவதும் குணமடைந்த பின்னர் மீண்டும் வாலிபால் விளையாடுவேன்” என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

மாணவியின் தந்தை சதிஷ் கூறும்போது, ” நாங்கள் சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறோம். எங்கள் மகள், எங்கள் வீட்டின் அருகே உள்ள கட்டடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து, தற்போது நடமாட முடியாத நிலையில் உள்ளார். தியாகராய நகரில் உள்ள வித்யோதயா மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்தார்.

ஆசிரியர்களின் நம்பிக்கை:கரோனா காலத்தில் 2020-ம் ஆண்டு தோழிகளுடன் விளையாடிய போது, தனது வீட்டின் அருகில் உள்ள கட்டடத்தில் இருந்து தவறி விழுந்ததில், இடுப்புக்கு கீழ் செயல் இழந்தது. உடனடியாக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.

அங்கு முடியாது எனக் கூறியதால், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 6 மாதத்திற்கு மேல் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியவில்லை. மருத்துவமனையில் மருத்துவர்கள் சரியான தகவலை அளிக்க மறுக்கின்றனர். சிகிச்சை செய்த போது, நோய் தொற்று ஏற்பட்டு, தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்தனர். ஆனாலும் குணம் அடையவில்லை.

11 ம் வகுப்பு வரையில் கல்விக்கட்டணத்தை நான் தான் கட்டி வந்தேன். 12 ம் வகுப்பிற்கான கட்டணம் முழுவதையும் பள்ளியின் நிர்வாகம் கட்டி வருகிறது. தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள் கொடுத்த நம்பிக்கையால் வீட்டில் இருந்தே படித்து வந்தார். தற்போது, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை உதவியாளர் துணை கொண்டு எழுதுகிறார்” எனக் கூறினார்.

சிந்துவின் தாய் பேசுகையில், ”அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறேன். அவரால் வலியை பொறுத்துக் கொண்டு தனது உடையை கூட மாற்ற முடியாது. ஆனாலும் தைரியத்துடன் படித்து தேர்வு எழுதுகிறார்” எனக் கூறினார். கைப்பந்துப் போட்டியில் மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாடிய சிந்து, இன்று வீட்டிற்குள் முடங்கியுள்ளார். இருந்த போதும், கல்வியே வாழ்வில் ஒளியேற்றும் என்ற நம்பிக்கையில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதுகிறார்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளி மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் படிக்க கூகுள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Last Updated : May 6, 2022, 8:28 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details