சென்னை:சென்னையைச்சேர்ந்த பானுமதி என்பவர் கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் வழக்கு ஒன்றுக்காக எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையம் சென்ற போது இவருக்கும், உதவி ஆய்வாளராக பணியாற்றிய வீரமணிக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மகளின் திருமணசெலவுக்காக கடன் பெறுவதற்கு உத்தரவாதம் வேண்டும் எனக்கோரி பானுமதியிடம் வெற்றுத்தாள் மற்றும் வங்கி காசோலையில் கையெழுத்து பெற்று 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார், வீரமணி. மேலும் பானுமதியிடமிருந்து 13 சவரன் நகை மற்றும் பத்து லட்சம் ரூபாய் பணமும் தனியாக வாங்கியுள்ளார்.
கடன் பெற்ற உதவி ஆய்வாளர் வீரமணி, முறையாக திரும்ப செலுத்தாத நிலையில் பணத்தை திரும்ப அளிக்குமாறு பானுமதி, உதவி ஆய்வாளர் வீரமணியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், தற்போது பணம் இல்லை எனக் கூறியுள்ளார். அத்துடன் பணத்தை திருப்பிக்கேட்டால் பொய் வழக்குப்பதிவு செய்து சிறையில் தள்ளிவிடுதாக உதவி ஆய்வாளர் வீரமணி மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் அந்தப்பெண் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்க, அப்புகாரனது தரமணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பானுமதி தரமணி காவல் நிலையம் சென்று நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.