சென்னை: அரும்பாக்கத்தில் கடந்த 13ஆம் தேதி தனியார் நகைக்கடன் வங்கியில் 31.7 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் பணியாற்றிய முருகனே தனது கூட்டாளியுடன் இணைந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு முக்கிய கொள்ளையன் முருகன்,சூர்யா, சந்தோஷ், பாலாஜி, செந்தில்குமரன் ஆகிய 5 பேரைக் கைது செய்து நகைகளைப் பறிமுதல் செய்தனர்.
மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகையை உருக்க கருவியை வாங்கிக்கொடுத்து உதவிய நகை வியாபாரி கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்ரீவத்சவா கைது செய்யப்பட்டு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து, இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக சந்தோஷின் உறவினரான அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் இருந்து 6 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து கொள்ளையடித்த நகைகளை மறைத்து வைத்திருந்த காரணத்தினால் ஆய்வாளர் அமல்ராஜ் மற்றும் அவரது மனைவி மெர்ஸி இந்திராவிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 31.7 கிலோ நகைகளை முழுவதுமாக மீட்டதற்காக வடக்கு கூடுதல் ஆணையர் அன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, அரும்பாக்கம் கொள்ளை வழக்கில் கொள்ளையடிக்கப்பட்ட 31.7 கிலோ நகைகளை முழுவதுமாக மீட்டு, இவ்வழக்கில் தொடர்புடைய மொத்தம் 7 பேரைக் கைது செய்துள்ளதாக அவர் கூறினார். குறிப்பாக கொள்ளையடித்த 6.5 கிலோ நகைகளை கொள்ளையன் சந்தோஷ், அவரது உறவினரான அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் மறைத்து வைத்திருப்பது தெரியவந்ததால் அவற்றைப் பறிமுதல் செய்து, காவல் ஆய்வாளர் அமல்ராஜை கைது செய்துள்ளதாக அவர் கூறினார்.
கொள்ளையடிப்பதற்கு முன்பு, காவல் ஆய்வாளரின் தொடர்பு இல்லை எனவும்; கொள்ளையடித்த பிறகு நகைகளை மறைத்து வைக்க ஆய்வாளர் உதவி இருப்பது தெரியவந்த காரணத்தினால், காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.