சென்னை:சென்னை, கோவை, கரூர் ஆகிய மாவட்டங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக், அரசியல் உதவியாளர் கோகுல் ஆகியோருக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த மே 26ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர்.
குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக் குடோனில் இருந்து பொருட்களை எடுத்து செல்வதற்கான டெண்டரில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றதாகவும், மது ஆலைகள் மூலமாக பல ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் எட்டு நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
இதில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான துணை மேயர் தாரணி சரவணன், கொங்கு மெஸ் சுப்பிரமணி, அமைச்சரின் சகோதரர் அசோக்குமார், நெடுஞ்சாலைத்துறை சாலை ஒப்பந்ததாரர் சங்கர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. மேலும், செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்தும் சோதனைக்கு உள்ளானது.
இதனைத்தொடர்ந்து, வருமான வரித்துறையினரின் நடத்திய தொடர் வேட்டையில், இதில் சம்பந்தப்பட்டோரின் வங்கிக் கணக்கு விவரங்கள், முதலீடுகள், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் புதிதாக துவங்கிய தொழில் உட்பட அனைத்தும் விசாரணைக்கு உள்ளானது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் காட்டப்படாத ரொக்கத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.