தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கு: சாட்டையைச் சுழற்றும் நீதிமன்றம், தீவிரமடையும் விசாரணை - Rajesh Das

சென்னை: ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கு விசாரணை அலுவலராக விழுப்புரம் சிபிசிஐடி எஸ்பி நியமனம்செய்யப்பட்டுள்ளார், பெண் ஐபிஎஸ் அலுவலர் ஒருவர் புகார் கொடுப்பதற்கு இவ்வளவு அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார் என்றால் சாதாரண பெண் காவலர்கள் நிலை என்ன என நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளனர்.

ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கு
ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கு

By

Published : Mar 1, 2021, 5:34 PM IST

Updated : Mar 1, 2021, 10:05 PM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தபோது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் எஸ்பி ஒருவர், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியான ராஜேஷ் தாஸ் தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவர் மீது புகார் அளித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது முதலமைச்சர் பழனிசாமி நடவடிக்கை எடுக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், எதிர்க்கட்சிகளிடமிருந்து எழுந்த கடும் அழுத்தத்தை அடுத்து புகார் மீது நடவடிக்கை எடுக்க கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஆறு பேர் அடங்கிய விசாகா குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.

அத்தோடு மட்டுமல்லாமல் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.

தீவிரமடையும் விசாரணை

இந்த நிலையில், பெண் ஐபிஎஸ் அலுவலருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகார் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்த காவல் துறைத் தலைவர் (டிஜிபி) ஜே.கே. திரிபாதி நேற்று (பிப். 28) உத்தரவிட்டிருந்தார்.

ராஜேஷ் தாஸ்

இந்நிலையில் விழுப்புரம் சிபிசிஐடி காவல் துறையினர் பெண் எஸ்பி கொடுத்த புகாரின்பேரில்,

  • மானபங்கப்படுத்துதல் [354a]
  • சட்டவிரோதமாகத் தடுத்த நிறுத்தல் [341]
  • கொலை மிரட்டல் [506(1)]
  • பெண் வன்கொடுமைச் சட்டம் [4]

ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியை புகார் கொடுக்கவிடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் மீதும் மேற்கண்ட நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணை அதிகாரி - விழுப்புரம் எஸ்.பி முத்தரசி

இந்த நிலையில் ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கு விசாரணை அலுவலராக விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்பி கோமதி நியமிக்கப்பட்டார், பின்னர் விழுப்புரம் எஸ்பி முத்தரசியை விசாரணை அலுவலராக மாற்றி சிபிசிஐடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சாட்டையைச் சுழற்றும் நீதிமன்றம்

பெண் ஐபிஎஸ் அலுவலர் ஒருவர் புகார் கொடுப்பதற்கு இவ்வளவு அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார் என்றால், சாதாரண பெண் காவலர்கள் நிலை என்ன என நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளனர்.

மேலும், விசாரணையின் முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் சிபிசிஐடி அறிக்கைத் தாக்கல்செய்ய வேண்டும் எனவும், பெண் ஐபிஎஸ்-க்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நேரடியாகக் கண்காணிக்கும் என்று தெரிவித்துள்ளது.

Last Updated : Mar 1, 2021, 10:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details