சென்னை:அரியலூர் நகராட்சியில் ஃபிட்டராக பணியாற்றிய ரங்கநாதன், மின் பணியாளராக பணியாற்றிய வெலிங்டன் ஆகியோரை கடந்த 2008ஆம் ஆண்டு, பணி நிரந்தரம் செய்து, நகராட்சி செயல் அலுவலர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இருப்பினும், அந்த உத்தரவை செயல்படுத்தாததால், ரங்கநாதனும், வெலிங்டனும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2008 ஆம் ஆண்டு நகராட்சி செயல் அலுவலர் பிறப்பித்த உத்தரவை மூன்று மாதங்களில் அமல்படுத்தி, ரங்கநாதன் மற்றும் வெலிங்டனுக்கு சேர வேண்டிய பணப் பலன்களை வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்களை சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படாததால், வெலிங்டன் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியுள்ளதாக அரியலூர் நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து. ஆனால், மனுதாரர்களுக்கு எந்த பணப்பயன்களும் வழங்கப்படவில்லை.
இதனால், மனுதாரர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது, இருவருக்கும் தலா ரூ.11 லட்சத்து 38 ஆயிரத்து 772 ரூபாய் சம்பள பாக்கி வழங்க வேண்டியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும், நகராட்சியிடம் போதிய நிதி இல்லாததால் இத்தொகையை வழங்க நகராட்சி சார்பில் அவகாசம் கோரப்பட்டது.