சென்னை: கடந்த 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய நிறுவனப்பணியாளர்கள் பணி நிபந்தனை விதிகளின்கீழ் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் அர்ச்சகர்கள் நியமனத்துக்குத் தடை விதிக்கக்கோரி, மத்தியபிரதேசத்தைச்சேர்ந்த ஜகத்குரு ராமநாதாச்சார்யா சுவாமி ராம்பத்ராச்சார்யா ஸ்ரீதுளசி பீட சேவா நியாஸ் மற்றும் டெல்லி, உத்தரப்பிரதேசம், பெங்களூருவைச் சேர்ந்த எட்டு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், ’தமிழ்நாட்டில் பல கோயில்களில் அர்ச்சகர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. அதில், அரசு பயிற்சியகங்களில் ஓராண்டு பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர்கள் பணிக்கான தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சைவ சமய மற்றும் வைணவ சமய கோயில்களில் குறிப்பிட்ட பிரிவினரைச் சேர்ந்தவர்களையே அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும், ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு ஆகம விதிகள் உள்ளன. அதன் அடிப்படையில் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் எவரும் தமிழ்நாடு சேர்ந்தவர்கள் அல்ல என்பதால் இந்த வழக்கை தாக்கல் செய்ய அவர்களுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனவும், ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்கள் எவை என அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் விளக்கமளித்தார்.