சென்னை: தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், மருத்துவ மேற்படிப்பு மாணவர்களும், பயிற்சி மருத்துவர்களும் எட்டு மணி நேரத்துக்கு மேல் பணியாற்ற நிர்பந்திக்கப்படுவதாகக் கூறி, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், பணிச்சுமை காரணமாகப் பயிற்சி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்வி இயக்குநர் கண்காணிக்க உத்தரவு
தொடர்ந்து பயிற்சி மருத்துவர்களுக்கு எட்டு மணி நேர பணியை நிர்ணயித்து, 2015ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பைக் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது கடந்த பிப்ரவரி மாதத்துக்குப் பின் கூடுதல் பணி நேரம் ஒதுக்கப்படுவதாக எந்தப் புகாரும் இல்லை எனவும், கூடுதல் பணி நேரம் ஒதுக்கியது குறித்து புகார் அளிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகளில் மேற்படிப்பு மாணவர்களுக்கும், பயிற்சி மருத்துவர்களுக்கும் கூடுதல் பணி நேரம் ஒதுக்கப்படுகிறதா எனக் கண்காணிக்க வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குநருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
இதையும் படிங்க:நாயகன் அவதாரத்தில் செந்தில் - டப்பிங் நிறைவு