தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

50வது ஆண்டை நிறைவு செய்யும் அண்ணா மேம்பாலம் - புதுப்பொலிவுடன் திறப்பது எப்போது?

திமுக ஆட்சியின் போது சென்னை மாநகரின் மையப்பகுதியில் கட்டப்பட்டுள்ள அண்ணா மேம்பாலம் இன்றுடன் 50 ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதனால் பாலத்தை பொலிவூட்டும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

50வது ஆண்டை நிறைவு செய்யும் அண்ணா மேம்பாலம்
50வது ஆண்டை நிறைவு செய்யும் அண்ணா மேம்பாலம்

By

Published : Jul 1, 2023, 7:38 PM IST

50வது ஆண்டை நிறைவு செய்யும் அண்ணா மேம்பாலம் - புதுப்பொலிவுடன் திறப்பது எப்போது?

சென்னை:சென்னை மாநகரின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட அண்ணா மேம்பாலம் இன்றுடன் 50ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளது. பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அண்ணா மேம்பாலம் புதுப்பொலிவுடன் திறக்கப்படுவது எப்போது என்று பொதுமக்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.

திமுகவும் மேம்பாலங்களும்:திமுக ஆட்சியின்போது மேம்பாலங்கள் அதிகளவில் அமைக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக திமுக ஆட்சியில் பாலங்கள் அதிகளவில் கட்டப்பட்டு உள்ளது. இதன் பயனாக போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணிக்க முடிகிறது. அண்ணா மேம்பாலத்திற்கு எப்போதும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. இதனை அன்றைய காலத்தில் ஜெமினி மேம்பாலம் என்று அழைத்தனர். இந்த அண்ணா மேம்பாலம் இன்றுடன்(ஜூலை1) 50வது ஆண்டை நிறைவு செய்துள்ளது.

சென்னையின் மக்கள் தொகை வளர்ச்சி:சென்னையில் கட்டப்பட்ட முதல் மேம்பாலமாகவும், இந்திய அளவில் கட்டப்பட்ட 3வது மேம்பாலமாகவும் திகழ்கிறது அண்ணா மேம்பாலம். இந்தியா சுந்திரம்பெற்ற பிறகு, நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவை அதிகளவில் இருந்தது. 1941-ல் 7.77 லட்சமாக இருந்த சென்னையின் மக்கள்தொகை, அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 14 லட்சத்தைத் எட்டியது.

இதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்தது. இதனை ஒழுங்குபடுத்தும் விதமாக 1949 காலகட்டத்தில் மவுண்ட் ரோடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை என இரண்டு இடங்களில் மேம்பாலங்கள் கட்டுவதற்குச் சென்னை மாநகராட்சி திட்டமிட்டது. ஆனால், சில சூழ்நிலை காரணமாக அது செயல்வடிவம் பெறவில்லை. 1971ஆம் ஆண்டு சென்னையின் மக்கள் தொகை 24 லட்சத்தைக் கடந்தது. மக்கள் தொகை அதிகமானதால் வாகனங்களின் தேவைகளும் அதிகமாக இருந்தது.

அண்ணாவின் மறைவு தோற்றுவித்த மேம்பாலம்:முன்னதாக 1967ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக, அண்ணாவின் மறைவிற்கு பிறகு கருணாநிதி முதலமைச்சராகப் பதவியேற்றார். மவுண்ட் ரோடு பகுதிகளில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்த நிலையில், 1971ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி மேம்பாலம் கட்டுவதற்கு திட்டமிட்டு, அதற்கு ரூ.66 லட்சம் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. இது 700 மீட்டர் நீளம், 48 அடி அகலத்தில் அனைவரும் வியக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

மேம்பாலம் அமைப்பதற்கான ஒப்பந்தம் ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட 21 மாத கட்டுமானப்பணிகளுக்கு பின்னர் பொறியாளர்கள், நெடுஞ்சாலை கிராமியப் பணிகள்துறை பொறியாளர்களால் இந்த மேம்பாலம் 1973ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்தியாவிலேயே நீண்ட பாலமாக இந்தப் பாலம் திகழ்ந்தது. 1973ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி இந்த மேம்பாலம் திறக்கப்பட்டது. மேம்பாலத்தினை திறந்து வைத்த அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, இதற்கு அண்ணா மேம்பாலம் எனப் பெயர் சூட்டி, மேம்பாலத்தின் மேல் அண்ணாவிற்கும் சிலையும் அமைத்துள்ளார்.

எம்ஜிஆரால் பொலிவுபெற்ற அண்ணா மேம்பாலம்:அதேபோல் அண்ணா மேம்பாலத்திற்குக் கீழ் பகுதியில் உள்ள இடத்தில் மேம்பாலத்தின் மேல் செல்பவர்களும் பார்க்கும் வகையில், தூண் அமைத்து பெரியாருக்கு சிலை அமைக்கப்பட்டு, முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குதிரைப் பந்தயத்திற்கு தமிழ்நாட்டில் தடை செய்ததை நினைவுகூரும் வகையில் பாலத்தின் கீழே குதிரையைக் கட்டுப்படுத்தும் மனிதன் சிலையும் அமைக்கப்பட்டிருக்கின்றன. சென்னையின் மையப் பகுதியான நுங்கம்பாக்கத்தில், அண்ணா சாலை - நுங்கம்பாக்கம் சாலை - ராதாகிருஷ்ணன் சாலை - ஜி.என். செட்டி சாலைகள் சந்திக்கும் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

ஜெமினி பிரிட்ஜ் என்ற அண்ணா மேம்பாலம்:மேம்பாலம் திறக்கப்பட்டபோது நாள் ஒன்றிற்கு சுமார் 12,000 வாகனங்கள் கடந்து சென்ற நிலையில், தற்போது நாள் ஒன்றிற்கு 3 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் கடந்துசெல்வதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அன்று பிரபலமாக விளங்கிய ஜெமினி ஸ்டுடியோ 1976-ல் மூடப்பட்டது. ஜெமினி ஸ்டுடியோ மேம்பாலம் அருகில் இருந்ததால், இந்த சந்திப்பை ஜெமினி சர்க்கிள் அல்லது ஜெமினி பிரிட்ஜ் என்றும் அழைக்கின்றனர். மேம்பாலங்களின் நகரம் என சென்னை அழைக்கப்படுவதற்கு விதையாக அமைந்தது, சென்னை மாநகரின் இந்த அண்ணா மேம்பாலம் தான். 50 ஆண்டுகளை கடந்தும் இன்றளவிலும் கட்டுறுதி குலையாமல் நிற்கிறது அண்ணா மேம்பாலம்.

அரை சதம் கண்ட அன்றைய ஜெமினி பிரிட்ஜ்:முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்த மேம்பாலம் தனது 50-வது ஆண்டு நிறைவு செய்யும் நேரத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா மேம்பாலத்தை அழகுபடுத்தும் பணியைத் தொடங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி மேம்பாலச் சந்திப்பில் கதீட்ரல் ரோடு செல்லும் பகுதியில் பல்லவர் கால பாணியில் செதுக்கப்பட்ட 6 அடி உயர சிங்கம் சிலை அழகிய வடிவமைப்புடன் நிறுவ உத்தேசிக்கப்பட்டு உள்ளது. மேம்பாலத்தின் ஒவ்வொரு நுழைவு மற்றும் வெளியேறும் பகுதி என மொத்தம் 8 இடங்களில் அழகிய கல் தூண்கள் அமைக்கப்பட உள்ளன. இதுவரையில் அண்ணா மேம்பாலத்தில் மொத்தம் 80 தூண்கள் இருக்கின்றன.

ஏனைய முனைப்புடன் தயாராகும் அண்ணா மேம்பாலம்:மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்ட விவரங்கள், தற்பொழுது பொது மக்கள் பார்வைக்குத் தெரியாமல் உள்ளது. மேலும் ஏனைய புதுமுனைப்புகளுடன் மேம்பாலம் தயாராகி வருகின்றது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேம்பாலத்தின் அருகே புல்தரைகளில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் அழகிய தமிழ் எழுத்துகள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரது பொன்மொழிகளும் தூண்களில் செதுக்கப்பட உள்ளதாகவும், ரூபாய் 9 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வரும் அண்ணா மேம்பாலம் விரைவில் புதுப்பொலிவுடன் திறக்கப்பட இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீண்டும் அழகிய தோற்றத்துடன் அண்ணா மேம்பாலத்தைப் பார்க்க பொதுமக்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க:நாடாளுமன்ற மழைக்கால கூட்டம் ஜூலை 20ல் தொடக்கம்... பொது சிவில் சட்ட மசோதா தாக்கலா?

ABOUT THE AUTHOR

...view details