'தேர்வில் தோல்வியடைந்தவர்களை தேர்ச்சிபெற்றதாக அறிவிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை'
சென்னை: தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை, தேர்ச்சிபெற்றதாக அறிவிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி மாணவர்கள், தாங்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை (அரியர்) தேர்வு எழுதுவதற்கான கட்டணங்களைச் செலுத்தி விண்ணப்பித்திருந்தால் அவர்கள் தேர்வில் தேர்ச்சிபெற்றதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது வியப்பாக உள்ளது.
பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை நடத்தி, கற்பனைகள் அடிப்படையில் மாணவர்களைத் தேர்ச்சி பெறச் செய்வதில்லை. பல்கலைக்கழகங்கள் சிண்டிகேட், செனட், கல்விக்குழு உள்ளிட்ட அதிகாரம் மிக்க அமைப்புகளைக் கொண்ட தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.
அவற்றின் வழிகாட்டுதல்படிதான் தேர்வுகள் நடத்தி மாணவர்களை வெற்றிபெற்றதாக அறிவிக்க முடியும். மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வுகளை ரத்துசெய்து அவர்களைத் தேர்ச்சிபெற்றதாக அறிவிப்பதோ, பல்கலைக்கழகங்களின் கல்விக் கொள்கையில் தலையிடுவதற்கோ மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.
அனைத்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களும் விழிப்புடன் இருக்க வேண்டிய சூழல் இதுவாகும். பல்கலைக்கழகங்களின் கல்வித் தரத்தைக் கட்டிக்காப்பது துணைவேந்தர்களின் தலையாயக் கடமையாகும். தேர்ச்சி பெற முடியாமல்போன பாடங்களுக்குத்தான் மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர்.
அந்தப் பாடங்கள் தொடர்பாக அவர்கள் தேர்வு எழுதாமலேயே அவர்களைத் தேர்ச்சிபெற்றதாக அறிவிப்பது முற்றிலும் மாறுபட்டது.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் சிலர் 10 பாடங்களுக்கு மேல் தேர்ச்சிபெறாமல் இருப்பார்கள். அந்தப் பாடங்களில் அவர்கள் 20 சதவீதத்துக்கும் குறைவாகவே மதிப்பெண் பெற்றிருக்கக்கூடும்.
இந்த அறிவிப்பால் பல்கலைக்கழகங்களின் கல்வித்தரம் முற்றிலும் பாதிக்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழகம் போன்ற உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் இதுகுறித்து உறுதியான முடிவை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.