தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

”நீட் தேர்வு மசோதா: நல்லதே நடக்கும் என்று நம்புவோம்”

நீட் தேர்விற்கு விலக்கு பெறுவற்கு இயற்றப்பட்ட சட்டத்திற்கு அனுமதி பெறுவது தொடர்பாக குடியரசு தலைவரிடம் யார் சென்று பேசுவது என்பது குறித்தும், தேவைப்பட்டால் அழுத்தம் கொடுப்பதற்கான முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா. சுப்ரமணியன்
அமைச்சர் மா. சுப்ரமணியன்

By

Published : Sep 13, 2021, 10:26 PM IST

Updated : Sep 13, 2021, 11:20 PM IST

சென்னை :தமிழ்நாடு மருத்துவக் கட்டமைப்பு, கரோனா தொற்றை கட்டுப்படுத்திய விதம், தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்டவை குறித்து தெரிந்துக் கொள்ளவும், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் அறிந்துக் கொள்ளவும்,மருந்துகள் கொள்முதல் செய்யும் போது பின்பற்றப்படும் நடைமுறைகளை கண்டறிந்து தெரிந்துக் கொள்வதற்காக மஹாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் அனுகுஸ்ராவ் தோபே தலைமையில், அம்மாநில சுகாதார செயலர் மேரி நீலிமா உள்ளிட்ட ஒன்பது பேர் கொண்ட குழுவினர் தமிழ்நாடு வந்துள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டையில் பொது சுகதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தின் வளாகத்தில், மருத்துவம்,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், செயலாளர் ராதா கிருஷ்ணன்,அலுவலர்களை சந்தித்து பேசினர்.

மக்களை தேடி மருத்துவம்

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பை கண்டறிவதற்கு மஹாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வருகை தந்துள்ளார். மக்களை தேடி மருத்துவத்தை மஹாராஷ்டிராவில் செயல்படுத்த உள்ளதாகவும், இந்த திட்டம் தன்னை கவர்ந்ததாக அவர் தெரிவித்தார்.

”நீட் தேர்வு மசோதா: நல்லதே நடக்கும் என்று நம்புவோம்”

தமிழ்நாட்டில், நேற்று ஒரே நாளில் 28 லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசி செலுத்தியத்தை கேட்டு பிரம்மித்தார்கள்.நேற்று மதியத்திற்கு மேல் தங்களுக்கு தடுப்பூசி வேண்டும் என பல்வேறுத் தரப்பில் இருந்தும் கேட்டனர்.தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கட்டமைப்பின் மூலம் 50 லட்சம் நபர்களுக்கு போட முடியும் என்ற நிலை இருந்தது.

ஒன்றிய அமைச்சருக்கு கடிதம்

அடுத்தவாரத்தில் மீண்டும் தடுப்பூசி முகாம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.இதற்காக ஒன்றிய அரசின் தொகுப்பில் இருந்து 50 லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக தர வேண்டும் என ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். மேலும் தொடர்ந்து தினமும் தடுப்பூசி போடும் முகாம் நடைபெறும்.

மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் அதிகளவில் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். தற்பொழுது 50 ஒன்றியங்களில் உள்ள இந்தத் திட்டத்தை விரிவுப்படுத்துவதற்காக நான்கு ஆயிரம் செவிலியர்களும், 10 ஆயிரம் பணியாளர்களையும் தேர்வு செய்ய உள்ளோம். டிசம்பர் மாதம் இறுதிக்குள் ஒரு கோடி பேரை இந்தத் திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட் தேர்வில் இருந்து விலக்குப்பெற நடவடிக்கை

நீட் தேர்வுக்குறித்து ஆ.ராசா பேசிய ஆடியோ தொடர்பான கேள்விக்கு, தேர்வை பொறுத்தவரை அதில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பது திமுகவின் பிரதான கொள்கை. நிச்சயம் குடியரசு தலைவர் இதனை புறம் தள்ள வாய்ப்பு இல்லை. நிச்சயம் தமிழ்நாடு அரசின் இந்த முயற்சிக்கு ஒன்றிய அரசு இறங்கி வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பியது. ஒன்றிய அரசு அந்த தீர்மானங்களை திருப்பி அனுப்பியதை கூட சட்டப்பேரவைக்கு தெரிவிக்கவில்லை. ஆனால் திமுக ஆட்சி அமைந்த நான்கு மாதங்களில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, 86 ஆயிரம் பேரிடம் கருத்துக் கேட்கப்பட்டது.

நல்லதே நடக்கும் என்று நம்புவோம்

அதன் அடிப்படையில் சட்டவல்லுனர்களை ஆலோசித்து சட்டமாக இயற்றப்பட்டுள்ளது.இந்த சட்டத்திற்கு அனுமதி கிடைக்கும். மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்த முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வில் இருந்து விலக்குப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தான் கூறப்பட்டுள்ளது.

நம்பிக்கைத்தான் வாழ்க்கை, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தொடர்பாக இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவோம். இதற்கான காரண காரியங்கள் வலுவாகவே இருக்கிறது. குடியரசு தலைவரிடம் யார் சென்று பேசுவது என்பது குறித்து பின்னர் முடிவு செய்வார்கள்.

இதனை நாங்கள் ஆளுநருக்கு அனுப்புவோம், அதை அவர் குடியரசு தலைவருக்கு அனுப்புவார்.குடியரசுத் தலைவர் அனுமதி அளிக்க காலதமதம் செய்தால், தேவைப்பட்டால் அழுத்தம் கொடுப்பதற்கான முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும். நல்லதே நடக்கும் என்று நம்புவோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : மக்களைத் தேடி மருத்துவம் - மகராஷ்டிராவில் செயல்படுத்த திட்டம்

Last Updated : Sep 13, 2021, 11:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details