தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தனியார் வேலைவாய்ப்பிலும் தமிழர்களுக்கே முன்னுரிமை" - அமைச்சர் தங்கம் தென்னரசு! - தேன்கனிக்கோட்டை டாடா எலெக்ட்ரானிக்ஸ்

தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொழில் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்குவதை அரசு உறுதி செய்யும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

thangam thenarasu
thangam thenarasu

By

Published : Nov 25, 2022, 8:13 PM IST

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் அமைந்துள்ள டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில், வட மாநில தொழிலாளர்களுக்கே அதிக வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும், தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "டாடா எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மின்னணு பொருட்களை உற்பத்தி செய்வதற்காக தங்களது தொழிற்சாலையை கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ள ஜிஎம்ஆர் தொழிற்பூங்காவில், சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்து வருகிறது. 4,684 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டு வரும் இத்தொழிற்சாலையின் மூலம் ஏறத்தாழ 18,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தொழிற்சாலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருவதாக பத்திரிகை செய்திகளும், புகார்களும் அரசிற்கு வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிறுவனம் தற்போது வரை தமிழ்நாட்டைச் சார்ந்த ஏறத்தாழ 5,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. வணிக ரீதியிலான உற்பத்தியினைத் தொடங்கும்போது பணியாளர் தேவையில் ஏறத்தாழ 80 விழுக்காடு பணியிடங்களுக்கு தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களை நியமிக்க, டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

பணி நியமனத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்த பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை முதன்மைச் செயலாளர் ஆகியோர் இந்நிறுவனத்துடன் கலந்தாலோசனை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, இந்நிறுவனம் சார்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வாயிலாக தென்காசி, நாகப்பட்டினம், நாகர்கோவில், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இவற்றில் 7,559 நபர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 1,993 நபர்களுக்கு தற்போது வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்நிறுவனம் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 3 நாட்கள் நடந்த வேலைவாய்ப்பு முகாம்களில், 895 நபர்கள் கலந்து கொண்டதில், 355 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர்களுக்கு நிறுவனத்தால் வேலைவாய்ப்பு வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் அமைந்துள்ள பிற தொழில் நிறுவனங்களும் தமிழ்நாட்டைச் சார்ந்த நபர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதை அரசு உறுதி செய்யும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரூ.500 பல்புக்கு ரூ.5000 கொடுத்த இபிஎஸ் - அமைச்சர் பெரியகருப்பன் விளாசல்!

ABOUT THE AUTHOR

...view details