சென்னை: "சட்டப்பூர்வமான வாக்காளர்களாக இருப்பவர்கள் எப்படி சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களாக இருக்க முடியும்", என மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் மற்றும் சமூக ஆர்வலர் மேத்தா பட்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'சமீபத்தில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கோவிந்தசாமி நகரில் வசித்த வீடுகளை அலுவலர்கள் அகற்றியதை வன்மையாக கண்டிக்கிறேன். சென்னை மயிலாப்பூர் பக்கிங்காம் கால்வாயை ஒட்டிய பகுதியான ஆர்.ஏ. புரம் கோவிந்தசாமி நகர் தமிழ்நாடு குடிசை சட்டம் 1971-ன் கீழ் அறிவிக்கப்பட்ட குடிசைப் பகுதியாகும். தனிநபரான ராஜிவ் ராய் என்பவரின் சுயநலத்துக்காக தொடுத்த பொதுநல வழக்கில் 625 வீடுகளை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
'ஏழைகளை அரசு வாக்கு வங்கிகளாகவே பயன்படுத்துகிறது' - விமர்சித்த மேத்தா பட்கர்! மேலும் அந்தப்பகுதியில் வசித்து வந்த கண்ணையா என்ற தொழிலாளி 'வீடுகளை இடிக்க வேண்டாம். தங்களின் குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வுரிமை பறிபோகும்' என அரசு அலுவலர்களிடம் சொல்லி தீக்குளித்து இறந்தார்.
மேலும் தீக்குளித்து இறந்த கண்ணையா என்பவர், அப்பகுதியில் 15 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தவர் என அலுவலர்கள் கூறுவது பொய்யாகும். மேலும் அவரது பூர்வீகமே கோவிந்தசாமி நகர் தான் என்பது உண்மை. அரசுகள் நகர ஏழைகளை வாக்கு வங்கிகளுக்காகவே பயன்படுத்துகிறது என்பதுதான் யதார்த்த உண்மை’ என மேத்தா பட்கர் கூறினார்.
ஆக்கிரமிப்பு என்பது நாடு முழுக்கவும் நடைபெறுகிறது: கண்ணையாவின் மறைவுக்குப் பிறகு அனைத்துக் கட்சித் தலைவர்களும் கோவிந்தசாமி நகர் மக்களுக்கு ஆதரவாக போராட்டக்களத்தில் இறங்கினர். இப்பிரச்னை தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிரொலித்தது. பின் மாநில அரசு தற்காலிகமாக வீடுகளை இடிப்பதை நிறுத்தி வைத்ததோடு, மந்தைவெளி மயிலாப்பூர் பகுதிகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்யவும் இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும்; இனிவரும் காலங்களில் மக்களை கலந்து ஆலோசித்து மக்களின் ஆலோசனையின்பேரில் மாற்று இடம் கொடுக்கவும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார்.
இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல. ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்னைகளை இந்தியா முழுவதும் வாழும் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். எனவே இதற்கு ஒரு முழுமையான தீர்வு எட்டப்பட வேண்டும். பணம் படைத்தவர்கள் உழைக்கும் வர்க்கத்தினரை சுரண்டுவதே வழக்கமான ஒன்றாகி விட்டது” எனத் தெரிவித்தார்.
மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தை பற்றி பேசுகையில், ’’தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கும் அமைப்புசாரா தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள் ஆகியோர் அவலமான நிலையில் உள்ளனர். நிலமற்றவர்களாகவும், வீடற்றவர்களாகவும் அவதிப்பட்டு வருகின்றனர். உபரி நிலங்கள், பஞ்சமி நிலங்கள் ஏராளமாக இருந்தும் ஏழை மக்களின் விவசாயத்திற்கும் வீட்டு வசதிக்கும் பிரித்து தரப்படவில்லை.
மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தரப்படும் ரூ.1.7 லட்சத்தில் 300 சதுர அடியில் வீடு கட்டவே முடியாது. இன்றைய விலைவாசியில் 7 லட்சம் ரூபாய் செலவாகும். இதனால்தான் விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள் இந்த வீடு கட்டும் திட்டத்தில் பயன்பெற முன்வருவதில்லை", எனக் கூறினார்.
முன்னதாக மேத்தா பட்கர் ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப்பேசினார்.
இதையும் படிங்க: பி.எஸ்சி டேட்டா சயின்ஸ் படிப்பு - 101 மாணவர்களுக்கு சென்னை ஐஐடி சான்றிதழ்!