இதுதொடர்பாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறுகையில், "ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கையான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2019 ஜனவரி 22 முதல் 30 வரை வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளையும், குற்றவியல் நடவடிக்கைகளையும் ரத்து செய்துள்ளது. மிகவும் காலதாமதமான நடவடிக்கையாக இருந்தாலும், ஊழியர்கள் நலன் கருதி அதனை வரவேற்கிறோம். போராட்டத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லாத சங்கங்களின் பெயரை குறிப்பிட்டு வெளியிட்டுள்ள, அரசின் அறிவிப்பு களத்தில் போராட்டத்தை முன்னெடுத்த ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை அவமதிப்பதாக உள்ளது. மேலும் கோரிக்கைகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு குறித்து அரசு எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட ஓய்வூதியத்தை மறு ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை குறித்து மௌனம் சாதிப்பது ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை ஏமாற்றும் நடவடிக்கையாகவே உள்ளது. கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய ஆசிரியர்களும் அரசுஊழியர்களும் ஒழுங்கு நடவடிக்கைகளையும், குற்றவியல் நடவடிக்கைகளையும் ரத்து செய்யக்கோரி தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்தது.
தேர்தல்கால களச் சூழலை கருத்தில் கொண்டும் முதலமைச்சர் இந்த ரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் பற்றி முதலமைச்சரின் அறிவிப்பில் ஒரு வார்த்தை கூடஇல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் முக்கியக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி அறிவிப்பு வெளியிட வேண்டும். மேலும், வேலை நிறுத்தக் காலத்தில் பணி மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை மீண்டும் முன்பு அவர்கள் பணியாற்றிய இடத்தில் பணியமர்த்திட வேண்டும். கடந்த காலங்களை போல் வேலைநிறுத்தக் காலத்தை முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.