சென்னை திருவல்லிக்கேணி சுபத்ரால் தெருவில் வசித்து வருபவர் டோளாராம். இவர் இருசக்கர வாகன ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் தேவேந்திரன் (14) 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று (அக்.07) தேவேந்திரன் டியூஷனுக்குச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் தேவேந்திரனின் செல்ஃபோன் எண்ணிலிருந்து அவரது தந்தை டோளா ராமிற்கு அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர், “உனது மகன் தேவேந்திரனை கடத்திவிட்டோம். 10 லட்சம் ரூபாய் பணம் தரவில்லை என்றால் அவனை கொன்றுவிடுவோம்” என மிரட்டியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த டோளாராம், செய்வதறியாது திகைத்திருந்தபோது, மீண்டும் அவருக்கு தொடர்பு கொண்டு பேசிய சிறுவன், தன்னை ஒரு கும்பல் கடத்தி சேப்பாக்கம் மைதானத்தின் புலூ கேட் அருகே விட்டுச்சென்றதாக கூறியுள்ளார்.
இது குறித்து அண்ணா சாலை காவல் துறையினருக்குத் தகவல் தெரியவர, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் சிறுவனை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், சம்பவ இடத்திலுள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுவன் ஆட்டோவில் சென்றது தெரியவந்தது.