தேர்தல் நெருங்கிவிட்டால் தலைவர்களின் பரப்புரை பயணம், மேடைப் பேச்சுகள், எதிரெதிர் விமர்சனங்கள், கூட்டணி அமைப்பது என நாள்கள் களைகட்டும். அதேபோல் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவர். தேர்தலில் வெல்வதற்கு களப்பணி, கூட்டணி அமைப்பது போன்றவை எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கான முக்கியத்துவத்தை தேர்தல் அறிக்கைகளும் பெற்றிருக்கின்றன.
மக்களைப் பொறுத்தவரை அந்த தேர்தல் அறிக்கை என்பது அதனை வெளியிடுபவர்கள் அவர்களுக்கு செய்து கொடுத்திருக்கும் சத்தியம். அதனை மீற மாட்டார்கள் என்பதே எண்ணம். அப்படிப்பட்ட தேர்தல் அறிக்கைகள் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021 இன்னும் மூன்று மாதங்களில் நடக்க இருக்கிறது. அனைத்து கட்சிகளும் வாக்குறுதிகளை வெளியிட ஆரம்பித்துவிட்டன. மேலும், தேர்தல் அறிக்கைகளை தயாரிக்கும் பணிகளிலும் இறங்கிவிட்டன. ஆளுங்கட்சியான அதிமுகவில் அமைக்கப்பட்டிருக்கும் குழுவில் பொன்னையன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை, சி.வி.சண்முகம், ஓ.எஸ். மணியன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
ஈபிஎஸ், ஓபிஎஸ் (கோப்பு படம்) திமுக தரப்பில் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையில் கனிமொழி, டிகேஎஸ் இளங்கோவன், திருச்சி சிவா, சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய சாராம்சங்கள் குறித்த தகவல்களைப் பெற, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தனர்.
தேர்தல் அறிக்கையுடன் ஸ்டாலின் (கோப்பு படம்) இப்படி 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலும் களைகட்ட தொடங்கியுள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் குறிப்பாக ஜெயலலிதாவும், கருணாநிதியும் தேர்தல் அறிக்கைகளில் பல வாக்குறுதிகளை அளித்தனர்.
2006ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையை கருணாநிதி தேர்தலின் கதாநாயகனாகவே பார்த்தார். அந்த ஆண்டு தேர்தல் அறிக்கையை முதலில் அறிவித்தது அதிமுக. அதற்காகவே காத்திருந்தது போல் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத விஷயங்களைத் தெரிந்துகொண்டு, அதனைத் தனது தேர்தல் அறிக்கையில் சேர்த்தார் கருணாநிதி.
அப்படி, அனைத்து குடும்ப அட்டைக்கும் ஒரு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் இலவச நிலம், 7,000 கோடி ரூபாய் விவசாயக் கடன் ரத்து என கருணாநிதி அன்று தேர்தல் அறிக்கையில் அறிவித்த விஷயங்கள் அவருக்கு வாக்குகளாக மாறின.
இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட ஜெயலலிதா 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகே ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். மேலும், அதில் இலவச லேப்டாப், இலவசமாக நான்கு ஆடுகள் வழங்குவது உள்ளிட்டவற்றை இணைத்தார்.
2006ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கை வெளியிடும் கருணாநிதி அதுமட்டுமின்றி, 2006 முதல் 2011 வரை ஆட்சி செய்த திமுக, மின்வெட்டு விவகாரத்தில் மிகப்பெரிய விமர்சனத்தை சந்தித்தது. அதனை அறிக்’கை’யில் எடுத்தார் ஜெயலலிதா. 2013ஆம் ஆண்டுக்குள் 5,000 மெகாவாட் மின்சாரம் மேலும் அதிகமாக உற்பத்தியாக்கப்படும் என்றும், இயற்கை எரிவாயு மின்சாரம் தயாரிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தது அந்தத் தேர்தலில் அவர் பெற்ற வெற்றிக்கு காரணமாகக் கருதப்படுகிறது.
அதேசமயம், தேர்தல் அறிக்கைகளை வெளியிடும் கட்சிகள் அதை வெறும் காகிதத்தோடு நிறுத்திவிடாமல் செயலாற்றவும் வேண்டும். அறிக்கைகளில் அறிவித்ததை ஆட்சியேற்ற புதிதில் வழங்கிவிட்டு இடையில் இருக்கும் வருடங்களில் கிடப்பில் போட்டுவிட்டு மறு தேர்தல் நெருங்கும் சமயத்தில், இன்னமும் நல்லாட்சி திட்டங்கள் நடைபெறுகிறது என்று காட்டிக்கொள்ளாமல் அறிக்கைகளில் அறிவித்ததை மக்களிடம் முழுமையாக கொண்டு சேர்க்க வேண்டும் என ஒருதரப்பினர் கூறுகின்றனர்.
தற்போதும் திமுக, அதிமுக வெளியிடப்போகும் தேர்தல் அறிக்கை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் அனுபவமும், தொலைநோக்கு பார்வையும் வரவிருக்கும் தேர்தல் அறிக்கையில் தெரிந்துவிடும் என்பதால் அக்கட்சியினரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். தேர்தல் அறிக்கைகள் அரசியல் களத்தில் ஏகப்பட்ட விளையாட்டுகளை நிகழ்த்தியுள்ளன. இப்போதும் அரசியல் களத்தில் தேர்தல் அறிக்கைகளின் விளையாட்டு இருக்குமா என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.