புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் டி.ஆர். பட்டினம் பகுதியில் வசித்த பாலாஜி (32) என்பவர் குவைத் நாட்டில் ஓட்டுநராகப் பணிபுரிந்துவந்தார்.
அரபு நாட்டில் வேலையை முடித்துவிட்டு தனது சொந்த ஊரான புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மனைவி, பிள்ளைகள், உறவினர்களைச் சந்திக்கும் கனவுடன் இண்டிகோ விமானம் மூலம் ஆகஸ்ட் 27ஆம் தேதி காலை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தார்.
வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய சூழல் உள்ளதால் அதனையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் அருகே உள்ள சவிதா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் புகைப்பிடிப்பதற்காக முதல் மாடிக்கு வந்தவர் நிலைதடுமாறி மேலே இருந்து கீழே விழுந்ததில் படுகாயமுற்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சொந்த ஊருக்குச் சென்று மனைவி, குழந்தைகளைப் பார்க்கலாம் என்ற ஆசையில் வந்தவர் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் பலியான சம்பவம் பாலாஜியின் உறவினர்களிடையே மிகப்பெரும் சோகத்தை உண்டாக்கியது.
சவிதா மருத்துவமனையில் ஆங்காங்கே கட்டுமான பணிகள் நடைபெற்றுவருவதால் இரும்புத் தளவாடங்கள் பல இடங்களில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. பாலாஜி விழுந்த இடமும் அப்படிப்பட்ட இடம் எனக் கூறப்படுகிறது.
எனவே மருத்துவமனையில் எச்சரிக்கை பலகைகள் வைத்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது எனப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.