சென்னை:விமான நிலைய அதிகாரிகள் அளித்த தகவலின்படி ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போன் நகரில் இருந்து ஏர் இந்தியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தின் ட்ரீம் லைனர் ரக விமானம் 277 பயணிகளுடன் டெல்லி புறப்பட்டது. இந்திய நேரப்படி காலை10:45 மணியளவில் மெல்போன் நகர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு டெல்லி விமான நிலையத்திற்கு சென்று கொண்டு இருந்தது. இந்த விமானம் இன்று மாலை 6:10 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியிருக்க வேண்டும்.
ஆனால் இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்துள்ளது. இதை அடுத்து விமானி அவசரமாக டெல்லியில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அந்த நேரத்தில் விமானம் சென்னை வான் வழியை கடந்து கொண்டு இருந்தது. உடனடியாக டெல்லி கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானத்தை உடனடியாக சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கும்படி உத்தரவிட்டனர்.
இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் அந்த ஏர் இந்தியா ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறங்குவதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். அதன் பின்பு அந்த விமானம் இன்று மாலை 4.30 மணி அளவில் சென்னை விமான நிலைய சர்வதேச முனையம் பகுதியில் தரை இறங்கியது. பயணிகள் அனைவரும் விமானத்திலேயே அமர்ந்திருந்தனர். சென்னை விமான நிலையத்தில் அந்த ஏர் இந்தியா ட்ரீம் லைனர் விமானத்திற்கு ஏரி பொருள் நிரப்பப்பட்டது.
இதற்கிடையே மெல்போன் நகரில் இருந்து இந்த விமானத்தை இயக்கி வந்த விமானிகள் தங்கள் பணி நேரம் நிறைவடைந்து விட்டதாக அறிவித்தனர். பணி நேரம் நிறைவடைந்ததும் எந்த விமான நிலையத்தில் விமானம் தரையிறங்குகிறதோ அங்கிருந்து நாங்கள் ஓய்வுக்கு செல்ல வேண்டும் என்று விமான பாதுகாப்பு சட்ட விதிமுறை உள்ளது. எனவே நாங்கள் சென்னையில் ஓய்வுக்காக செல்கிறோம் என்று கூறிவிட்டு விமானியும் துணை விமானியும் விமானத்தில் இருந்து இறங்கி ஓய்வுக்காக வெளியில் சென்று விட்டனர்.
இதை அடுத்து ஏர் இந்தியா விமான நிறுவனம் சென்னை விமான நிலையத்தில் இருந்த மாற்று விமானிகளை பணிக்கு அழைத்தனர். அந்த மாற்று விமானிகள் மூலம் மாலை 5.30 அமணியளவில் விமானத்தை டெல்லிக்கு புறப்பட்டு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே மெல்போனில் இருந்து புறப்படும் போதே தேவையான எரிபொருளை முழுமையாக ஏன் நிரப்பப்படவில்லை? எதற்காக சென்னையில் அவசரமாக தரையிறங்க வேண்டிய தேவை ஏற்பட்டது? என்பது பற்றி ஏர் இந்தியா நிறுவனம் இதுவரையில் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.