தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடுவானில் பறந்து கொண்டு இருந்த விமானத்தில் புகை பிடித்தவர் கைது ! - மகாராஷ்டிரா மாநில பயணி

குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்துக்குள் புகை பிடித்து ரகளை செய்த மகாராஷ்டிரா மாநில பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.

நடுவானில் பறந்து கொண்டியிருந்த விமானத்தில் புகை பிடித்தவர் கைது !
நடுவானில் பறந்து கொண்டியிருந்த விமானத்தில் புகை பிடித்தவர் கைது !

By

Published : Jul 10, 2023, 3:31 PM IST

சென்னை:குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானம் 38,000 அடி உயரத்தில் நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்துக்குள் புகை பிடித்து ரகளை செய்த மகாராஷ்டிரா மாநில பயணியை, சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய போலீசார் கைது செய்து, வழக்குகள் பதிவு செய்தனர்.

குவைத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னைக்கு நேற்று இரவு வந்து கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் 184 பயணிகள் பயணித்துக் கொண்டு இருந்தனர். விமானம் சுமார் 38,000 அடி உயரத்தில் நடு வானில் பறந்து கொண்டு இருந்தது.

அப்போது அந்த விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்த முகமத் சதாம் (32) என்ற பயணி தனது ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த சிகரெட் மற்றும் சிகரெட் லைட்டரை எடுத்து சிகரெட் பற்ற வைத்து புகைக்க தொடங்கினார். இதையடுத்து சக பயணிகள் அவர் புகை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பயணி முகமத் சதாம், சக பயணிகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் தொடர்ந்து புகை பிடித்துக் கொண்டிருந்தார்.

இதையடுத்து பயணிகள் விமான பணிப்பெண்களிடம் புகார் செய்தனர். உடனே விமான பணிப்பெண்கள், மகராஷ்டிரா மாநில பயணியிடம் விமானத்திற்குள் புகை பிடிக்கக் கூடாது. சக பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விமானத்தின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம் என்று கண்டித்தனர். ஆனால் அந்த பயணி விமான பணிப்பெண்கள் கண்டிப்பை அலட்சியப்படுத்திவிட்டு தொடர்ந்து புகை பிடித்துக் கொண்டு இருந்தார்.

இதையும் படிங்க; வடமாநிலங்களில் 'பேய் ஆட்டம்' ஆடும் மழை - தத்தளிக்கும் பஞ்சாப், ஹிமாச்சல், டெல்லி!

இதையடுத்து விமான பணிப்பெண்கள் தலைமை விமானியிடம் புகார் செய்தனர். உடனே தலைமை விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். நடு வானில் பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் பயணி ஒருவர் புகை பிடித்து ரகளை செய்கிறார். எனவே பாதுகாப்பு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இதை அடுத்து விமானம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரையிறங்கியது. உடனடியாக இண்டிகோ ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்துக்குள் ஏறி புகைப்பிடித்து ரகளை செய்த மகாராஷ்டிரா மாநில பயணி முகமது சதாமை பிடித்து விசாரித்தனர்.

அப்போதும் அந்தப் பயணி விமானத்திற்குள் புகை பிடிப்பது எனது விருப்பம். அதைக் கேட்க நீங்கள் யார் என்று கேட்டுள்ளார். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் முகமத் சதாமை விமானத்தை விட்டு கீழே இறக்கி குடியுரிமைச் சோதனை,சுங்கச் சோதனை போன்றவைகளை முடிக்க செய்தனர்.

அதன் பின்பு பயணியை அழைத்துச் சென்று சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். அதோடு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவன அதிகாரிகள் பயணி முகமது சதாம் மீது முறைப்படி போலீசில் புகார் செய்தனர். இதை அடுத்து போலீசார் பயணி முகமது சதாம் மீது விமான பாதுகாப்பு சட்டம், பாதுகாக்கப்பட்ட இடத்தில் தடையை மீறி புகைப்பிடித்தல், விமானத்திற்கும், சக பயணிகளுக்கும் ஆபத்தை விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, பயணி முகமத் சதாமை கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details