சென்னை: பெல்காமிலிருந்து மைசூருக்கு ட்ரூஜெட் ஏர்லைன்ஸ் என்ற தனியார் பயணிகள் விமானம் 47 பயணிகள்,5 விமான ஊழியர்கள் என மொத்தம் 52 பேருடன் நேற்று நள்ளிரவு புறப்பட்டது. மைசூரில் மோசமான வானிலை காரணமாக, அங்கு விமானம் தரையிறங்க முடியவில்லை. எனவே விமானம் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
அதன்படி சென்னை விமான நிலையம் வந்து தரையிறங்க தயாரான போது, விமானத்தில் திடீா் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானிலே வட்டமடித்தது. இதன்காரணமாக, சென்னை விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் துரிதமாக செய்யப்பட்டன. பின்பு விமானம் சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது.
ஆனால் ஓடுபாதையிலேயே நின்று விட்டது. பின்பு பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து அவசரமாக கீழே இறக்கப்பட்டு, சென்னை விமானநிலைய ஓய்வு அறைகளில் தங்கவைக்கப்பட்டனா். விமானம் பழுதடைந்து ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டதால் அதன் பிறகு வந்த விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.