தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்! - ஆளுநர்

ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (பிப். 2) தொடங்குகிறது. எதிர்க்கட்சிகள் முக்கியப் பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளன.

Assembly
Assembly

By

Published : Feb 1, 2021, 7:11 PM IST

Updated : Feb 2, 2021, 9:11 AM IST

சென்னை: ஆளுநர் உரையுடன் நிகழாண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

இந்தக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்குகிறது. இதுதொடர்பாக, சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன், ஜனவரி 21ஆம் தேதி அறிவிப்பை வெளியிட்டார்.

இந்தக் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம், கலைவாணர் அரங்கத்திலுள்ள பல்வகைக் கூட்டரங்கில் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. முதலில் ஆளுநர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்த, அவரைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசிப்பார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள சூழலில், ஆளுநர் உரையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரோனா விவகாரம், வேளாண்மைச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப பிரதான எதிர்க்கட்சியான திமுக திட்டமிட்டுள்ளது.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையில் துறை ரீதியான திட்டங்களின் நிலை, அரசின் திட்டங்கள் அறிவிப்பாக வெளியாகும். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவிவரும் நிலையில், பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்தவுள்ளார். ஆளுநர் உரைக்குப் பிறகு, சட்டப்பேரவை சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடத்தி, கூட்டத்தொடர் எத்தனை நாள்கள் நடைபெறும், ஆளுநர் உரை மீதான விவாதம் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

கூட்டத்தொடர் 3 அல்லது 4 நாள்கள் நடைபெறும் எனச் சட்டப்பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் மத்திய நிதிநிலை அறிக்கைத் தாக்கல்செய்யப்பட்டிருக்கும் நிலையில், மாநில அரசின் நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி தாக்கல்செய்யப்படும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Last Updated : Feb 2, 2021, 9:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details