சென்னை: இலங்கையை பூர்வீகமாக கொண்ட லைகா குழுமம், இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் செல்போன், சிம் கார்டு, சினிமா புரொடக்ஷன், டிஜிட்டல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. லைகா நிறுவனத்தின் உரிமையாளரான சுபாஷ்கரன் 2006ஆம் ஆண்டு லைகா மொபைல்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி தற்போது 16க்கும் மேற்பட்ட தொழில்களில் நாடு முழுவதும் ஈடுபட்டு வருகின்றார்.
குறிப்பாக லைகா நிறுவனம் கத்தி, எந்திரன் 2.0, பொன்னியின் செல்வன், தர்பார் என பல முன்னணி நடிகர்களை வைத்து பல பிரமாண்ட திரைப்படங்களையும் தயாரித்துள்ளது. இந்தியன் 2, விடா முயற்சி போன்ற படங்களையும் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் சட்டவிரோதப் பணபரிமாற்றம் தொடர்பாக லைகா குழுமம் தொடர்புடைய பல்வேறு இடங்களில், தமிழகம் முழுவதும் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, சென்னை தியாகராய நகர் விஜயராகவா சாலையில் உள்ள லைகா தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட லைகா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரமாண்ட வசூல் செய்துள்ளதால், நடிகர்களுக்கு வழங்கிய சம்பளத் தொகை எவ்வளவு, இதில் சட்டவிரோதப் பணபரிமாற்றம் ஏதும் நிகழ்ந்துள்ளதா என அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.