சென்னை: இந்தியாவில் இருந்து ஆவண குறும்படத்திற்கான பட்டியலில் பரிந்துரைக்கப்பட்ட 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' (The Elephant Whisperers) குறும்படம் 'சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது'-ஐ தட்டிச் சென்றது. தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் படம், யானைக் கூட்டத்தால் கைவிடப்பட்ட குட்டி யானையை முதுமலையைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி என்ற பழங்குடியின தம்பதி பராமரிப்பதை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.
திரைப்படம் முக்கியமான வெற்றியை பெற்றிருக்கும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தனை சந்தித்தது ஈடிவி பாரத். அவர் வழங்கிய சிறப்பு நேர்காணலில் 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் ஆஸ்கரில் வெற்றி பெற்றது குறித்த அவரது மகிழ்ச்சியை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து பேசிய அவர், 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் ஆஸ்கரில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், இந்த படத்தின் இயக்குனரான கார்த்திகி கொன்சால்வ்ஸ், நீலகிரி மாவட்டத்தில் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு யானைகள் முகாம் குறித்து ஏற்கனவே தெரிந்திருந்தது எனவும் கூறியுள்ளார். மேலும், இப்படத்தில் மனிதர்கள் விலங்குடன் எவ்வாறு வாழ வேண்டும் என்று குறித்து அழகாக விளக்கி உள்ளதாக அவர் கூறினார்.
யானைகள் பற்றியும் காடுகள் பற்றியும் தற்போது உள்ள சூழ்நிலையில் ஒரு நல்ல படத்தை எடுக்க வேண்டும் என்று சிறந்த படத்தை எடுத்துள்ளதாக கூறிய அவர், இயக்குனரின் இந்த எண்ணத்திற்கும் ஆத்மார்த்தமான உழைப்பிற்கும் கிடைத்த வெற்றிதான் இந்த ஆஸ்கர் விருது என்று புகழாரம் சூட்டியுள்ளார். அத்துடன், வனத்துறைக்கு இதில் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், 'முதுமலை தெப்பக்குடு பகுதிகளில் யானைக் கூட்டங்களில் இருந்து தனிமைப்படுகின்ற யானை குட்டிகள் நிகழ்வு தொடர் நிகழ்வாக உள்ளது. இதனை வனத்துறையினர் கண்டறிந்து குட்டிகளை பராமரித்து உடனடியாக அதனுடைய தாய் யானையுடன் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அப்படி சேர்க்க முடியவில்லை என்றால் அது வளரும் வரை முகாமில் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது. யானைகளைப் பொறுத்தவரை மனிதர்களுடன் உடனடியாக சேர்ந்து வாழும் சாமர்த்தியமும் கொண்டது. என கூறினார்.