சென்னைதேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர் பயன்பெறும் வகையில் 1 கோடி மதிப்புள்ள 4 லட்சம் கே.ஏன் 95 (KN95) முகக்கவசங்களை இலவசமாக வழங்கும் நிகழ்ச்சியை இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச்சந்தித்த அமைச்சர், 'குரங்கம்மையைப் பொறுத்தவரை கேரளா - தமிழ்நாடு மாநில 13 எல்லைகளிலும் கண்காணிப்புப்பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. கருவிகளின் மூலம் கண்காணிக்கும் பணிகளும் நடைபெறுகிறது. பன்னாட்டு விமான நிலையங்களான சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரைக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, வெப்ப அளவுகள் கண்காணிக்கப்படுகிறது.
ரேண்டம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதுவரை குரங்கம்மைக்கான பாதிப்புகள் தமிழ்நாட்டில் தென்படவில்லை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள ரூ.1 கோடி மதிப்புள்ள 4 லட்சம் முகக்கவசங்களை ஈஷா அமைப்பின் பிரதிநிதிகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு அளித்துள்ளார்கள்.
இவை அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை இயக்குநர்களிடமும் தலா 10,000 என்ற அளவிலும், மீதமுள்ள 20,000 முகக்கவசங்கள் பொதுசுகாதாரத்துறைக்கும் வழங்கப்பட்டுள்ளது.
கே.ஏன்95 (KN95) முகக்கவசங்களை இலவசமாக வழங்கும் நிகழ்ச்சியை இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் இந்த முகக்கவசங்கள் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறையின் இணை இயக்குநர்கள் பெற்று தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள வட்டார அளவிலான அரசு மருத்துவமனைகளுக்கு வருகின்ற நோயாளிகள், பார்வையாளர்கள் மற்றும் பணியாற்றுபவர்களுக்கும் வழங்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
சேலம் மற்றும் ஈரோட்டில் உள்ள சுதா மருத்துவமனைகள், பெருந்துறையில் உள்ள ராம்பிரசாத் மருத்துவமனை, ஓசூரில் உள்ள விஜய் மருத்துவமனை ஆகிய 4 மருத்துவமனைகளில் செயல்பட்டு வந்த ஸ்கேன் சென்டர்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஈரோடு, சுதா மருத்துவமனை மற்றும் பெருந்துறை ராம்பிரசாத் ஆகிய இரண்டு மருத்துவமனைகளின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
அதோடு மட்டுமல்லாமல் இந்த 4 மருத்துவமனைகளிலும் செயற்கை கருத்தரித்தலுக்காக மருத்துவம் பார்க்கின்ற 4 சிறப்பு மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டைப்பொறுத்தவரை 190 இடங்களில் செயற்கை கருத்தரித்தல் மையங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன.
இந்த 190 மருத்துவமனைகளுக்கும் பொதுவான விதிமுறைகள் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள 3 சட்டங்களின்படி எந்த மாதிரியான நடவடிக்கைகளை இந்த மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டும், எந்தமாதிரியான விதிமுறைகள் அவர்கள் தொடர வேண்டும் போன்ற பல்வேறு விதிமுறைகள் மற்றும் சட்டகுறிப்புகளை உள்ளடக்கிய பொதுவான அறிவிப்புகள் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர்களிடமும் தரப்பட்டது’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம்; மருத்துவமனை ஸ்கேன் சென்டர் சீலை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!